கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: ஆர்டிஐயில் அம்பலமான அதிர்ச்சி தகவல்!

By KU BUREAU

திண்டுக்கல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

இந்த மருத்துவமனைக்கு நிர்ணயிக்கப்பட்ட 12 மருத்துவர்களில் 6 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், செவிலியர் உதவியாளர்கள், நிர்வாக பணி உள்ளிட்ட 24 பணியிடங்களில் 9 பேர் மட்டும் உள்ளளர்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களை பெற்ற மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வெரோனிகா மேரி கூறியதாவது: கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் 2023-ம் ஆண்டில் 13,623 உள் மற்றம் 1,35,307 வெளி நோயாளிகளும் மற்றும் 2024ம் ஆண்டு 12,869 உள் மற்றும் 1,26,026 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை அதிகமாக இருப்பது மருத்துவச் சேவையில் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலையில் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராம ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மருத்துவ சிகிச்சைக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையைத்தான் நம்பி உள்ளனர்.

ஏப்ரல், மே மற்றும் இதர வார விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை மிக அதிகம். வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசல் மற்றும் சிறு மற்றும் பெரிய அளவிலான வாகன விபத்துகளில் காயமடைந்தோருக்கு அவசர சிகிச்சை, தற்கொலை முயற்சி, விஷப் பூச்சிக்கடி, வயோதிக பாதிப்பு மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மன்னவனூர், பெருமாள் மலை உள்ளிட்ட 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரை செய்யப்படும் சிக்கலான பிரசவங்கள் மற்றம் இதர அவசர சிகிச்சை நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுவதால் அதி முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவர் பற்றாகுறையால் சில முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் இதர மருத்துவ சேவைகளுக்கு மக்களை வத்தலகுண்டு அல்லது திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். பரிந்துரைகள் அதிகரிப்பதால் ஏழை, நடுத்தர நோயாளிகள் மலையிலிருந்து தரைப் பகுதியான வத்தலகுண்டு அல்லது பழநிக்கு அலைக்கழிக்கப் படுவதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு நிர்ணயிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்க ளை முழுமையாக நியமித்து சிறந்த சேவையை உறுதிப் படுத்த வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE