ஒரே இடத்தில் ‘ஹைபிரிட்’ முறையில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம்: மின்வாரியம் திட்டம்

By KU BUREAU

தமிழகத்தில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஒரே இடத்தில் ‘ஹைபிரிட்’ முறையில், காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்கள் சேர்த்து அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் அமைக்கப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதால், அவற்றின் செயல்திறன் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு, அங்கு ‘ஹைபிரிட்’ முறையில், அதாவது ஒரே இடத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஏற்கெனவே பலகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை, திருப்பூர் மாவட்டம் கேத்தனூர், மதுரை மாவட்டம் புளியங்குளம், தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, கயத்தாறு ஆகிய இடங்களில் உள்ள 17 மெகாவாட் திறன் கொண்ட 110 காற்றாலைகள் அகற்றப்படும்.

பழைய காற்றாலைகள் உள்ள இடங்களில் தற்போது 22 மெகாவாட் திறனில் காற்றாலை மற்றும் 18 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்களை, பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு பங்களிப்புடன் அமைக்க, மின்வாரிய இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசிடம் அனுமதி பெறப்பட உள்ளது.

இதன்மூலம், மின்நிலையம் அமைப்பதற்கான இடத்தை தனியார் நிறுவனத்துக்கு மின்வாரியம் குத்தகைக்கு வழங்கும். அங்கு நிறுவனம் தனது சொந்த செலவில் மின்நிலையம் அமைத்து 25 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.

அந்த நிறுவனத்திடம் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்யும். காற்றாலை மற்றும் சூரியசக்தி ஆகிய இருவகை மின்சாரத்துக்கும் ஒரு யூனிட்டுக்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து, அதைவிட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வரும் நிறுவனத்துக்கு ஆணை வழங்கப்படும். கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய விரைவில் டெண்டர் விடப்படும். மேலும், ஏற்கெனவே மின்வழித் தடம் இருப்பதால், புதிய வழித்தடம் அமைக்க தேவையில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்

VIEW COMMENTS