தூத்துக்குடியில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தகவல்

By KU BUREAU

தூத்துக்குடியில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் ராமநாதபுரம் தென்மண்டல குழாய் பதிக்கும் பிரிவு சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் 143 கிலோ மீட்டர் தூரத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழாய் மூலம் தூத்துக்குடி பொட்டல்காடு அருகே அமைக்கப்பட்டுள்ள எரிவாயு முனையத் துக்கு இயற்கை எரிவாயு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

தற்போது, தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு இயற்கை எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக அந்த தனியார் தொழிற்சாலை யின் குடியிருப்புகளுக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. வரும் மே மாதம் இறுதிக்குள் 2 ஆயிரம் இணைப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களை சந்தித்து குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்குவது குறித்து விளக்கி கூறி வருகின்றனர். இந்த திட்டத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு நேரடியாக வீட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மீட்டர் பொருத்தப்பட்டு, எரிவாயு பயன்படுத்தப்படும் அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. 2 மாதங்களுக்கு ஒரு முறை ரீடிங் எடுக்கப்பட்டு பயன்படுத்திய எரிவாயுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு கிலோ எரிவாயுக்கு ரூ.86 கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாகவும், இதனால் எல்.பி.ஜி. எரிவாயுவை விட விலை குறைவாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தூத்துக்குடி நகர்ப் பகுதிலும் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன. மேலும், தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு தனியாக குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு நெல்லைக்கும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE