செங்கோட்டையில் அதிர்ச்சி: கனமழையால் அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது

By KU BUREAU

தென்காசி: செங்கோட்டையில் 74 ஆண்டுகள் பழமையான அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை கனமழையால் இடிந்து விழுந்தது.

செங்கோட்டை ஆரியநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி 1951-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 74 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் தற்போது 148 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் செங்கோட்டையில் பலத்த மழை பெய்ததால், இந்த பள்ளி கட்டிடத்தில் தலைமை ஆசிரியர் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இச்சம்பவம் இரவில் நிகழ்ந்ததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இப்பள்ளியில் தான் இஸ்ரோவின் சார்பில் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநராக பணியாற்றிய நிகர்ஷாஜி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE