சென்னை: தமிழகத்தில் நிலவும் சமூக விரோத செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் காலை சேலத்திலிருந்து அவரது மனைவியுடன் காரில் திருப்பூர் சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை - சேலம் நெடுஞ்சாலையில் நண்பகல் 12 மணியளவில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, அவர்களைத் தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் அந்தக் காரை வழிமறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ரவுடி ஜானை ரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்தப் படுகொலை கடும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழகத்தில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலையையும், நாள்தோறும் பல கொலைகள் இதுபோன்று நடப்பதையும் பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழகம் மாறி இருப்பதையே இது காட்டுகிறது.
» பாஜக அரசின் அடியாள் துறையாக அமலாக்கத் துறை செயல்படுகிறது: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
» பழனி முருகன் கோயிலில் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர் உயிரிழப்பு: தினகரன் கண்டனம்
காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது. இந்த நிலைமை நீடித்தால் தமிழகம் தான் வன்முறையில் முதன்மை மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்துக்கு திமுக அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழகத்தை அமளிக்காடாக மாற்றியிருக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. தமிழகத்தையும், தமிழக மக்களையும் வன்முறையிலிருந்து காப்பாற்றவும், தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.