மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு: தமிழில் சைவ மந்திரங்கள் ஓத அனுமதி கோரி வழக்கு!

By KU BUREAU

கோவை: மருதமலை முருகன் கோயி்ல் குடமுழுக்கு விழா வேள்வி குண்ட நிகழ்வுகளில் தமிழில் சைவ மந்திரங்கள் ஓத அனுமதி அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சேவா அறக்கட்டளைத் தலைவரான டி.சுரேஷ் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோயிலில் வரும் ஏப்.4 அன்று குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ் கடவுளான மருதமலை முருகன் கோயில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற திருத்தலம் மட்டுமின்றி, கோயில் அருகே உள்ள மலைக் குகையில் பாம்பாட்டி சித்தர் யோக நிலையில் ஜீவசமாதியடைந்த முக்கிய தலமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்டர் பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் மாணவரான நான் கோவை, திருப்பூர், தருமபுரி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் வேள்வி குண்ட வழிபாடு பூஜைகளை தமிழில் சைவ மந்திரங்களைக் கூறி சிறப்பாக நடத்தியுள்ளேன். அதேபோல மருதமலை முருகன் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா வேள்வி குண்ட நிகழ்வுகளில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழில் சைவ மந்திரங்களை ஓத அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்.

தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு இன்னும் முழுமையாக அமல்படுத்தவில்லை. எனவே தனது கோரிக்கையை பரிசீலி்க்க தமிழக அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்" இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE