‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டம் பேரூர் ஆதீனத்தில் தொடக்கம்!

By KU BUREAU

கோவை: பேரூர் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டம், பேரூர் ஆதீன வளாகத்தில் இன்று தொடங்கப்பட உள்ளது.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரூர் ஆதீனத்தின் 24-வது குரு மகா சன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரூர் ஆதீனம், ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, நொய்யல் ஆறு அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரக்கன்றை நடவு செய்வதை இலக்காக கொண்டு ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக, கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரம் கிராமங்களில் அரச மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இத்திட்டம் இன்று (மார்ச் 20) பேரூர் ஆதீன வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது.

விழாவில் பேரூர் ஆதீனத்தின் 25-வது குரு மகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமர குரு பர சுவாமிகள், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன், நொய்யல் ஆறு அறக்கட்டளை அறங்காவலர் ஆறுச்சாமி, சிறு துளி அறக்கட்டளை அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்டோர் கலந்துகொள் கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE