“விஜய்யின் தவெக முதலில் தேர்தலில் நின்று டெபாசிட் வாங்கட்டும்...” - ஹெச்.ராஜா

By கி.தனபாலன்

பரமக்குடி: “நடிகர் விஜய்யின் தவெக முதலில் தேர்தலில் நின்று டெபாசிட் வாங்கட்டும், பார்ப்போம்” என பரமக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் படுகொலை செய்யப்பட்ட பாஜக முன்னாள் நகராட்சி உறுப்பினர் முருகனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “12 ஆண்டுகளுக்கு முன்பு முருகனை கொலை செய்தவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இதேபோல்தான் ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையன், டாக்டர் அரவிந்த ரெட்டி போன்றவர்களின் படுகொலை வழக்குகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்துக்களை பாதுகாக்க ஜனநாயகரீதியாக போராடுவோம்.

கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரு பக்தர், ராமேசுவரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பக்தர், தஞ்சாவூரில் ஒரு பக்தர் என 3 பேர் தரிசனத்துக்காக வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். எனவே முதல்வர் ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

திருச்செந்தூரில் வரிசையில் நின்று மயங்கி விழுந்து இறந்த பக்தரை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அமைச்சர் சேகர்பாபு பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். போலீஸார் அந்த குடும்பத்தை மிரட்டி எழுதி வாங்கி இறந்த பக்தரின் உடலைக் கொடுத்துள்ளனர்.

இந்த ஆட்சிக்கு மிகப் பெரிய ஆபத்தை ஆண்டவன் முடிவு செய்துவிட்டான். நடிகர் விஜய்யின் தவெக முதலில் 234 தொகுதியில் போட்டியிட வேண்டும், பின்னர் டெபாசிட் வாங்க வேண்டும். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இங்கு ஒன்றும் வித்தை காட்ட முடியாது” என தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE