தூத்துக்குடி: தூத்துக்குடி ஆஷ் நினைவு மண்டபம் முதியோர் பூங்காவாக மாற்றப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைகளை தீர்க்கும் முகாம் இன்று (மார்ச் 10) நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். ஆணையர் லி.மதுபாலன் முன்னிலை வகித்தார். முகாமில் மேயர் பேசியதாவது: ''தூத்துக்குடி மாநகரில் விடுபட்ட சாலைகள் அனைத்தும் போடுவதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வந்துவிடும். மே, ஜூன் மாதத்தில் அனைத்து சாலைகளும் போடப்பட்டுவிடும். மாநகராட்சி பட்ஜெட்டியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
நகரின் பிரதான சாலைகளின் இருபுறமும் பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பேவர் பிளாக் தளத்துக்கு மேல் வியாபாரிகள் சாய்வு தளம் அமைக்க தேவையில்லை. தூத்துக்குடி தெப்பகுளத்தை சுற்றி பேவர் பிளாக் தளம் அமைத்து, செயற்கை நீரூற்று போன்றவை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் வெகு விரைவில் தொடங்கும்.
வடக்கு மண்டல பகுதியில் ஆயிரம் பிரை பூங்கா என்ற முதியோருக்கான சிறப்பு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற கூடுதல் பூங்கா வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பழைய துறைமுகத்துக்கு எதிரே உள்ள ஆஷ் நினைவு மண்டபத்தை முதியோர் பூங்காவாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதேபோல் மாநகராட்சியில் காலியாக உள்ள இடங்களில், அந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்ஏவி பள்ளி மைதானம் 99 ஆண்டு குத்தகை முடிந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.
அந்த மைதானத்தை சுற்றி வேலி அமைத்து, தேவையான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுவதுடன், கேலரியும் அமைக்கப்படும். எந்த நேரமும் மக்கள் விளையாடும் வகையில் இந்த மைதானம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். மேலும், கடற்கரை சாலையில் ஒருபுறம் மட்டுமே வாக்கிங் டிராக் உள்ளது. மறுபுறத்திலும் வாக்கிங் டிராக் அமைக்க முடிவு செய்துள்ளோம். மாநகராட்சி சார்பில் ஒரு நீச்சல் குளம் அமைக்கவும் இடம் பார்த்து வருகிறோம். சரியான இடத்தை தேர்வு செய்து நீச்சல் குளம் அமைக்கப்படும் என்றார்'' மேயர். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.