விருதுநகர்: விருதுநகரின் மையப்பகுதியில் ஒரு நூற்றாண்டாக இயங்கி வரும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு பொதுமக்களும் நகராட்சி கவுன்சிலர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் எதிரே நகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தில் அரசு நகர்புற சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும், பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ளதாலும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் இடத்தில் இயங்கி வருவதால் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.
ராம மூர்த்தி சாலையில் ரயில்வே பாலம் கட்டப்படுவதற்கு முன்பு அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும் என்பதால் பலர் அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் அவசர சிகிச்சைக்காக இங்கு வந்து சிகிச்சைபெறுவது வழக்கம். அதோடு, ஒரு நூற்றாண்டை கண்ட மருத்துவ நிலையம் விருதுநகரில் உள்ள நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவ நிலையத்தில் பொதுமக்களுக்கு அன்றாடம் வழக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் தற்போது வரை தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கர்ப்பிணிகள் பதிவு, அவர்களுக்கான தொடர் பரிசோதனைகள் போன்றவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல ஆயிரம் பிரசவங்கள் நடந்த சுகாதார நிலையமான இங்கு 4 படுக்கை வசதி மட்டுமே இருந்து வருகிறது. அதோடு, சுகாதார நிலையம் இயங்கி வரும் கட்டிடம் நகராட்சிக்குச் சொந்தமானது.
» சிறுவர்கள் பைக் ஓட்டியதால் பெற்றோர் மீது வழக்கு: தூத்துக்குடி காவல்துறை நடவடிக்கை
» அவதூறு பரப்பிய விவகாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மாதங்களில் 10 போ் கைது!
போதிய இட வசதி இல்லாததாலும், பழைய கட்டிடம் என்பதாலும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாததாலும் தற்போது விருதுநகரில் மாரியம்மன் கோயில் எதிரே இயங்கி வரும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி அலுவலக பின்பகுதியில் இயங்கி வரும் ச.வெள்ளைச்சாமி நாடார் அண்ணாமலையம்மாள் (மகப்பேறு இல்லம்) நகர்புற சுகாதார மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நகரின் மையப் பகுதியில் ஒரு நூற்றாண்டாக இயங்கி வரும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு பொது மக்களும் நகராட்சி கவுன்சிலர்கள் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் நகராட்சி 4வது வார்டு கவுன்சிலர் பாட்சா ஆறுமுகம், 13வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் கூறுகையில், நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது.
24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார நிலைய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்துகொடுக்க வேண்டும். நகராட்சி பொறியாளர் கட்டிட உறுதியளிப்பு சான்றிதழ் வழங்கி மருத்துவமனையை இதே இடத்தில் தொடர்ந்து இயங்கச் செய்ய வேண்டும். மேலும், கர்ப்பிணிகளையும் புறநோயாளிகளையும் அலையவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் மாதவன் கூறுகையில், நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் போதிய இட வசதி இல்லை. புதிய பரிசோதனை கருவிகள் அமைக்க முடியவில்லை. படுக்க வசதிகளை அதிகரிக்க முடியவில்லை. பிரசவத்தின்போது அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவையெனில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலென்ஸ் வாகனத்தை நிறுத்துவதும் சிரமமாக உள்ளது.
எனவே தான், ரூ.60 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவலகம் பின்புறம் இங்கிவரும் ச.வெள்ளைச் சாமி நாடார் அண்ணா மலையம்மாள் நகர்புற சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், பிரசவங்கள் மட்டுமே இங்கு மாற்றப்பட்டுள்ளதே தவிர மற்ற சிகிச்சைகள் அனைத்தும் வழக்கம்போல் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.