விருதுநகர்: சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த அவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு மேசையை தள்ளி விட்டு ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி மாநகராட்சியில் கடந்த 11ம் தேதி நடந்த கவுன்சில் கூட்டத்தில் வீட்டுமனை பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கும் தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விவாதமின்றி சில நிமிடங்களில் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டப் பொருள் குறித்து விவாதிக்க நேற்று அவசரக் கூட்டம் நடைபெற்றது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாக்கியலட்சுமி, திமுக: சிவகாசி நகராட்சியாக இருந்தபோது 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய வீட்டுமனை அங்கீகாரத்தை மாற்ற ஆட்சேபனை இல்லை என நகரமைப்பு அலுவலர் அறிக்கை அளித்துள்ளார். அது மேயரின் உறவினர் இடம் என்றார்
ஜெயினுலாபுதீன், திமுக: அந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்டவர் 20 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார். இதற்கு மேயரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு, என்றார்.
» அவதூறு பரப்பிய விவகாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மாதங்களில் 10 போ் கைது!
» பள்ளிவாசல் இடம் இல்லை; திசையன்விளை போக்குவரத்து கழக பணிமனையை காலி செய்யும் உத்தரவுக்கு தடை
அப்போது திமுக கவுன்சிலர் ஶ்ரீனிகா எழுந்து மேயரிடம் கேள்வி கேட்டால் கவுன்சிலர்கள் எதற்கு பதில் கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அப்போது கவுன்சிலர்கள் இரு பிரிவாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கவுன்சிலர் ஜெயினுலாபுதீன் மேசையை தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரையும் அமைதிப்படுத்தி இருக்கையில் அமர வைத்தனர்.
இந்திராதேவி, திமுக: வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் 5 தீர்மானங்களுக்கு, கடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதை ரத்து செய்வதாக ஆணையர் அறிவித்த நிலையில், ஒரு வாரத்துக்கு உள்ளாகவே மீண்டும் அதே தீர்மானத்தை விவாதத்துக்கு கொண்டு வந்தது ஏன்.? அப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும், என்றார்.
ஆணையர்: வீட்டுமனை பிரிவுகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தவர்கள் சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் அமைக்க பணம் கட்டி உள்ளனர். தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் தான் தேவையான வசதிகளை மேற்கொள்ள முடியும், என்றார்.
சாந்தி, அதிமுக: வரி உயர்வில் ஓட்டு வீடுகளுக்கும் ரூ.3 ஆயிரம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாமுவேல், சுயேட்சை: சென்னை, கோவை போன்ற பெரிய மாநகராட்சிகளுக்கு இணையாக சிவகாசியில் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனால் 65-க்கும் மேற்பட்ட பெண்கள் பெயரில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரியில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும், என்றார்.
கரைமுருகன், அதிமுக: 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்துவதால் மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க முடியவில்லை. மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும், என்றார்.
மேயர்: மாதம் தோறும் கூட்டம் நடத்தப்படும், என்றார். இக்கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.