அடையாளம் தெரியாத உடல் என அடக்கம் செய்த போலீஸ்; அடுத்தநாள் கணவரை தேடிவந்த மனைவி - திருப்பத்தூர் சோகம்

By KU BUREAU

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆண் உடல் அடையாளம் தெரியாததால் காவல் துறையினர் நேற்று முன்தினம் அடக்கம் செய்தனர். இதற்கிடையே, அடக்கம் செய்தவரின் மனைவி கணவரை தேடி காவல் நிலையத்துக்கு நேற்று வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்ச்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் மதுப் பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகேயுள்ள விவசாய நிலத்துக்கு சென்று அங்கேயே அமர்ந்து மது அருந்துகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 10ம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தையொட்டியுள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதப்பதாக ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் மிதந்த உடலை மீட்டபோது, உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

இதையடுத்து, அடையாளம் தெரியாத ஆண் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஜோலார் பேட்டை காவல் துறையினர் இறந்தவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? அவர் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், எந்த முன்னேற்றமும் ஏற்படாததாலும், உயிரிழந்தவர் குறித்து யாரும் புகார் அளிக்க வராததால் ஆம்பூர் அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த அடையாளம் தெரியாத ஆண் உடலை காவல் துறையினர் மயானத்துக்கு எடுத்துச்சென்று நேற்று முன்தினம் அடக்கம் செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபீஸ் (24) என்ற இளம்பெண் வந்தார். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28) என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவர் திருப்பதியில் இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு கடந்த மார்ச் 10-ம் தேதி வந்தவர் மாற்று ரயில் மூலம் திருச்சி வர இருந்த நிலையில் அதன் பிறகு என்ன ஆனார் ? என்பது தெரியவில்லை.

அவரது கைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது வேறொருவர் பேசினார். அவரிடம், எனது கணவர் கைபேசி உங்களிடம் எப்படி ? வந்தது என கேட்டபோது அவர் அடமானமத்துக்கு வந்ததாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார். எனவே, எனது கணவர் என்ன ஆனார் ? எங்கு போனார் ? என்பதை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதைக்கேட்டதும், சந்தேகமடைந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் ஹேமாவதி கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆண் உடலில் காணப்பட்ட அடையாளங்களையும், புகைப்படம் மற்றும் அவர் அணிந்திருந்த உடைகளை அடையாளம் காட்டிய போது, அது தமிழ்ச்செல்வன் தான் எனக்கூறி இளம்பெண் நபீஸ் காவல் நிலையத்தில் கதறி அழுதார். இதையடுத்து, அவரை தேற்றிய காவல் துறையினர், தமிழ்ச்செல்வன் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடலை ஆம்பூர் மயானப் பகுதியில் அடக்கம் செய்த சம்பவத்தை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, நபீஸ் அளித்த புகாரின் பேரில், தமிழ்ச்செல்வன் கைபேசியை அடமானத்தில் இருப்பதாக கூறிய நபரை காவல் நிலையம் வரவழைத்தனர். பின்னர் அவரிடம், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழ்ச்செல்வன் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது அவருடன் 4 நபர்கள் இருந்தததாகவும், மது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, தமிழ்ச்செல்வன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி நபீஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத இளைஞரின் உடலை காவல் துறையினர் அடக்கம் செய்த மறுநாள் அவரை தேடி மனைவி காவல் நிலையம் வந்த இந்த சம்பவம் ஜோலார்பேட்டையில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE