புதுச்சேரியில் கட்டி முடித்தும் திறக்கப்படாத புதிய பேருந்து நிலையம்: அதிமுக நூதனப் போராட்டம்!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ள புதிய பேருந்து நிலையத்தை திறக்கக் கோரியும், ஆளும் அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். ஏராளமான அதிமுகவினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தின் இறுதியாக பேருந்தொன்றை பஸ்நிலையத்தின் உள்ளே எடுத்து செல்ல முற்பட்டனர்.

அதைத்தொடர்ந்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''புதுச்சேரி பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.29.55 கோடியில் டெண்டர் விடப்பட்டது. ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.33 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. ஒரு மாடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு 5 மாடி அளவில் வணிக வளாக கட்டிடம் கட்டுவதற்கு அடித்தளம் அமைக்க மக்களுடைய வரிப்பணம் திட்டமிட்டு வீணடிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிக்காக ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.4,750 செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஸ்டார் ஓட்டல் கட்டுமான பணிக்கு செய்யும் செலவு போன்று இங்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

பணிகள் முடிந்தும் ஒருசில அதிகார மோதலால் இதுவரை புதிய பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் தான் பேருந்து நிலையத்தை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஒரு வார காலத்துக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை என்றால் அடுத்தகட்டமாக ஏஎப்டி திடலில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தின் முன்பு மறியலில் ஈடுபட்டு பேருந்துகளை உள்ளே அனுமதிக்காத வகையில் போராட்டத்தை நடத்துவோம். பஸ் நிலையம் முன்பு உள்ள நடைமேம்பாலம் மோசமானநிலையில் உள்ளதால் அதை அரசு அகற்றினால் சாலையை விரிவாக்கம் செய்யலாம்." என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE