ரேஷன்கடை இல்லாத பகுதிகளில் வேன் மூலம் இலவச ரேஷன் அரிசி விநியோகம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் வேன் மூலம் இலவச ரேசன் அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: ரிச்சர்டு (பாஜக): குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம் மக்களுக்கு மாதந்தோறும் அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் பல பகுதிகளில் ரேஷன்கடைகளே இல்லை. சில பகுதிகளில் தற்காலிக இடங்களில் ரேஷன்கடைகள் செயல்படுகிறது. நகர பகுதியில் உள்ள கடைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்தான் வாடகை நிர்ணயித்துள்ளனர். முன்பணம் வழங்கவும் அரசு தயாராக இல்லாததால், வாடகை இடம் தர யாரும் முன்வருவதில்லை. வாடகை தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் திருமுருகன்: சில பகுதிகளில் ரேஷன்கடைகள் இல்லை என்பது உண்மைதான். வணிக வாடகை தொகை உயர்ந்துள்ளது. இதனால் அருகில் உள்ள கடையோடு இணைத்து இயக்க முயற்சித்துவருகிறோம். சமுதாய கூடம், கோவில்வளாகத்தில் ரேஷன்கடை அமைத்துள்ளோம். வாடகை சிரமங்களை தீர்க்கவும், அனைத்து இடங்களிலும் ரேஷன்கடைகளை திறக்கவும் சங்கத்திற்கு கையாளும் கட்டணம், சில்லரை கமிஷனை கிலோவுக்கு 90 பைசாவிலிருந்து ரூ.1.80 ஆக உயர்த்தியுள்ளோம். ஏப்ரல் முதல் மானியம் உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்படும்.

அப்போது உறுப்பினர்கள் நாஜிம், அங்காளன், வெங்கடேசன் ஆகியோர், ரேஷன்கடைகளில் 10 சதவீதத்தினருக்கு அரிசி கிடைக்காமல் போகிறது. சிகப்பு கார்டிலிருந்து, மஞ்சள் கார்டாக மாற்றப்பட்டவர்களுக்கு உடனடியாக அரிசி கிடைப்பதில்லை. இதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

முதல்வர் ரங்கசாமி: சில இடங்களில் ரேஷன் கடை இல்லை என்பது சரிதான். இதனால் ரேஷன்கடை இல்லாத பகுதிகளில் வேன் மூலம் அரிசி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ரேஷன்கடை ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் ரூ.ஒரு கோடி வழங்கியுள்ளோம். கமிஷன் தொகையையும் உயர்த்தியுள்ளோம். ஓரிரு மாதங்களில் பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE