புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் தோல், கண்கள், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய்கள், கோடை காலத்தில் நிலவும் சளி, இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.
வெப்ப பக்கவாதத்துக்கு (ஹீட் ஸ்ட்ரோக்) கோடை காலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி, தலைசுற்றல், பலவீனம், வெப்ப சோர்வு போன்றவை அறிகுறிகள் ஆகும். இதனால் உறுப்பு செயலிழப்பு, சுய நினைவு குறைவு, மேலும் உயிரிழப்பு கூட ஏற்படலாம். வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் அல்லது குளிர்ந்த காற்றின் உதவியோடு வெளியில் இருந்து உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்க முடியும். விரைந்து இச்சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம்.
கோடை காலத்தில் சரியாக சமைக்கப்படாத இறைச்சி, அசுத்தமான தண்ணீர், சாலையோர வியாபாரிகள் திறந்த வெளியில் வழங்கப்படும் உணவு ஆகியவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் ஒரு வகை வைரசால் கண் புண் எனப்படுகிற கஞ்சன்டிவைட்டீஸ் ஏற்பட வாய்ப் புள்ளது. இதை தவிர்க்க சன் கிளாஸ் பயன்படுத்துதல், கண்களை தொடுவதை தவிர்த்தல்,
முறையான சிகிச்சை எடுத்தல் போன்ற கண் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் பயனடையலாம். வெயில் காரணமாக மக்களுக்கு வியர்வையில் அதிக அளவு உப்பு சத்துக்கள் வீணாகும். இதை சரி செய்ய உப்பு கலந்த மோர் மற்றும் நீர் பானங்கள் அல்லது ஓஆர்எஸ் எனப்படும் உப்பு கரைசல் நீர் எடுப்பதன் மூலம் நீரிழப்பை தவிர்க்க முடியும்.
» பாம்பனில் புதிய ரயில் பாலம் திறப்பதில் தாமதம் - காரணம் என்ன?
» கோவையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: கிராம வாரியாக குழு ஏற்படுத்தி கண்காணிப்பு
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, புளு போன்ற காய்ச்சல் மற்றும் பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை, தட்டம்மை நோய் போன்ற நோய்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இவை பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுதல், தன்சுத்தம் பேணுதல், முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.