கோவையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: கிராம வாரியாக குழு ஏற்படுத்தி கண்காணிப்பு

By ஆர்.ஆதித்தன்

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக கிராம வாரியாக குழு ஏற்படுத்தி கண்காணிக்க மாவட்ட சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.

குழந்தை திருமண தடை சட்டம் 2006ல் மத்திய அரசால் இயற்றப்பட்டு, 2009ம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி ஆண்களுக்கு 21 வயது குறைவாகவும், பெண்களுக்கு 18 வயது குறைவாகவும் திருமணம் நடைபெற்றா ல், அது பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். மேலும், இத்திருமணம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. தமிழக அளவில் குழந்தை திருமண சட்டத்தை செயல்படுத்திட மாவட்ட சமூக நல அலுவலர்களை குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது.

குழந்தை திருமணத்தை ரத்து செய்து வழக்கு பதிவு செய்தல், குழந்தை திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் தங்குமிடம் வழங்க நீதிமன்றங்கள் மூலம் உத்தரவுகளை பெற்றுத் தருவது போன்ற பணிகளை சமூக நல அலுவலர்கள் செய்து வருகின்றனர். தமிழக அரசின் புள்ளிவிவரப்படி கடந்த 2023ல் 1995 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறியதாவது: கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2024ல் 37 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 97 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை வட்டாரங்களில் தலா 15 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. நிகழாண்டில் பிப்ரவரி மாதம் இறுதி வரை 17 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.

12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டு ள்ளது. பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 5 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. குழந்தை திருமணங்களை தடுக்க மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், 100 நாள் வேலை திட்டம், பிற மாநில தொழிலாளர் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமண தகவல் கிடைத்தவுடன் களப்பணியாளர்கள் நேரடியாகச் சென்று குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே உள்ளூர் மக்களை கொண்டு கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து வருகிறது. நிகழாண்டில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம வாரியாகக் குழு ஏற்படுத்தி குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகளை மாவட்ட சமூக நலத்துறை ஈடுபட்டு வருகிறது. குழந்தை திருமணம் குறித்து தெரியவந்தால் 1098, 181, 100 போன்ற அவசர எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். குறிப்பாக தொடர்புடைய மாணவியே புகார் செய்யலாம். அவரது பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். அவர்கள் தொடர்ந்து படிக்க அரசு உதவி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE