சென்னை: மணலி புதுநகர் திட்டப் பகுதிகளில் வீட்டு வசதி வாரியம், சிஎம்டிஏ ஒதுக்கிய மனை, வீடு, குடியிருப்புகளுக்கு பட்டா பெற விண்ணப்பிக்கலாம் என வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புதுநகர் திட்டப் பகுதியில் உள்ள பகுதி-1, பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கி பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
சிறப்பு முகாம்: பொதுமக்கள் பட்டா பெற ஏதுவாக தங்கள் விற்பனைப் பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக இன்று முதல் வரும் மார்ச் 21-ம் தேதிவரை காலை 10 மணிமுதல் மாலை 6 வரை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒப்படைத்து பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டப்பகுதியில் பட்டா பெறுவதற்கு ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.