50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்கக் கோரி சீமான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

By KU BUREAU

பெரியார் குறித்த பேச்சுக்காக தனக்கு எதிராகப் பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்கக் கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பெரியாரை அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி, தினமும் ஒரு காவல் நிலையத்தில் இருந்து சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சங்கர் ஆஜராகி, ‘பெரியார் குறித்து சீமான் வடலூரில்தான் பேசினார். ஆனால் அந்த பேச்சுக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது போலீஸார் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

பெரியாரை இழிவுபடுத்தி சீமான் ஒருபோதும் பேசவில்லை. பெரியார் பொதுக்கூட்டங்களில் பேசியது, நாளிதழ்களில் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் அடிப்படையில்தான் சீமான் பேசினார். எனவே இந்த வழக்குகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும்’, எனக் கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?. அந்த வழக்குகளின் புகார்தாரர் யார்? வழக்கு எண் என்ன? என எந்த விவரமும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை திரும்பப்பெற்று முழு விவரங்களுடன் மீண்டும் மனுவை தாக்கல் செய்யுங்கள்’ என அறிவுறுத்தினார்.

அதற்கு சீமான் தரப்பில், ‘ஆன்லைனில் வழக்கு விவரங்களைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அந்த விவரங்களை போலீஸார் மறைத்துள்ளனர். எனவே 50-க்கும் மேற்பட்ட வழக்குகளின் விவரங்களை சேகரித்து தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்’, என்றார்.

ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி, ‘இந்த மனுவில் எந்தெந்த காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், குற்ற எண்கள் குறித்தும் எந்த விவரமும் இல்லை. சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களைக் கூட எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கவில்லை.

இந்தச் சூழலில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரி்க்கையை ஏற்க இயலாது’ எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE