வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தவறியதற்காக மதுரை மாநகராட்சிக்கு ரூ.5.90 கோடி அபராதம்!

By கி.மகாராஜன்

மதுரை: வைகை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காதற்காக மதுரை மாநகராட்சிக்கு ரூ.5.90 அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

வருஷநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 295 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடலில் கலக்கிறது வைகை ஆறு. வைகையில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலக்கின்றன. மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. வைகை ஆற்று நீர் மாசடைந்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் வைகை ஆற்றில் தேனி முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு அமைத்து ஆய்வு நடத்தவும், பல்வேறு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூலித்து, அந்த தொகையில் ஆற்றை மறுசீரமைப்பு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் வைகை நதி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரும் இதே கோரிக்கை தொடர்பாக மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், வைகையில் தேனி மாவட்டத்தில் 29 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 இடங்களிலும், மதுரை மாவட்டத்தில் 41 இடங்களிலும் கழிவு நீர் கலக்கிறது. வைகையில் 35 ஆண்டுகளாக கழிவுநீர் விடப்படுகிறது. நீர்வளத்துறை, நகராட்சி, சுற்றுச்சூழல், உள்ளிட்ட 5 துறை செயலர்கள் வைகை ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுக்க எடுக்கப்படும். அதற்கு அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் மதுரை மாநகராட்சி மற்றும் சோழவந்தான் பேரூராட்சி செயலாளர், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பலமுறை கடிதம் மற்றும் மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மதுரை மாநகராட்சிக்கு ரூ.5.90 கோடி அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை 1.4.2020 முதல் 28.2.2025 வரை கணக்கிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தேனி, கடமலைக்குன்று - மயிலாடும்பாறை, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் தேவையான இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் 6.3.2025-ல் உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஊராட்சி யூனியன் பகுதியில் வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்காததற்காக ஏன் ரூ.2.80 கோடி அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு 4.3.2015-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர், திருப்புவனம் நகராட்சி ஆணையர், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகராட்சி ஆணையருக்கு வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், தேவையான இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வைகை நதியில் 5 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நீர் மாதிரி எடுக்கப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் வைகை நீர் பல இடங்களில் குளிப்பதற்கு தகுதியானதாகவும், பல இடங்களில் குளிப்பதற்கு தகுதியற்றதாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அரசு தரப்பில், சென்னையில் அரசு துறை செயலாளர்கள் பங்கேற்கும் நதிகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மார்ச் 23-ல் நடைபெறுகிறது. அதில் தாமிரபரணி, வைகை ஆறு தூய்மைப் பணி குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆலோசனைக் கூட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE