ஆர்.பி.உதயகுமார் அலுவலகம் முன்பு ‘குப்பை தொட்டி’ - மதுரை மாநகராட்சி நடவடிக்கை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சட்டமன்ற அதிமுக எதிர்கட்சித் துணைத்தலைவர், ஆர்பி.உதயகுமார் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் குப்பை தொட்டி வைத்து சென்றததால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் அங்கு திரண்டதால் குப்பை தொட்டியை மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதிகட்டம் என்பதால் மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி வசூல் மிக தீவிரமாக நடக்கிறது. 100 வார்டுகளிலும் சொத்து வரி செலுத்தாத வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் கடைகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு கட்டடிங்களுக்கு வரி செலுத்த வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. நீண்ட காலம் வரி பாக்கி வைத்துள்ள ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்களுடைய குடிநீர் இணைப்பு, பாதாளசாக்கடை இணைப்புகளை துண்டிப்பது, அந்த கட்டிடங்கள் முன் குப்பை தொட்டிகளை வைத்து சொத்துவரியை வசூலிக்கும் நடவடிக்கையை கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

மேலும், அந்த கட்டிடங்கள் முன் வரி பாக்கி குறித்தான தகவல் பலகை வைப்பது, நோட்டீஸ் ஓட்டும் நடவடிக்கையையும் மாநகராட்சி செய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 33வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் 80 அடி சாலையில் உள்ள அதிமுக சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் அலுவலகம் முன், மாநகராட்சி ஊழியர்கள் இன்று திடீரென்று குப்பை தொட்டியை வைத்து சென்றனர். அதனால், அப்பகுதியில் தூர்நாற்றம் வீசியது. முன்னாள் அமைச்சர் அலுவகலம் முன் குப்பை தொட்டி வைக்கப்பட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்பி.உதயகுமார், ஆரம்பகாலத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தது முதல் தற்போது வரை இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த அலுவலகத்துக்கு அவர் வந்தபிறகுதான், கட்சியில் உச்சம் பெறத் தொடங்கி, கட்சியில் முக்கிய பதவிகள், அமைச்சர் பதவி போன்றவை கிடைத்தது. அதனால், அவர் வாழ்க்கையிலும், கட்சியிலும் அதன்பிறகு பெரிய பதவிகளுக்கு வந்தாலும், சென்டிமெண்டுக்காக தற்போது வரை அந்த அலுவலகத்துக்கு தினமும் வந்து கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, கட்சிப்பணிகளை வடிவமைப்பது போன்றவை மேற்கொண்டு வருகிறார்.

அவரது இந்த அலுவலகம் முன் குப்பை தொட்டி வைத்த சம்பவம், அதிமுகவினர் மத்தியில் வேகமாக பரவியது. அவர்கள், கே.கே.நகரில் உள்ள அவரது அலுவலகம் முன்பாக குவியத் தொடங்கினர். அந்த வழியாக சென்ற பொதுமக்களும் நின்று ஆர்பி.உதயகுமார் அலுவலகத்தை வேடிக்கைப்பார்க்க தொடங்கினர். இந்த வணிக கட்டிடத்தில் ஆர்பி.உதயகுமார் அலுவலகம் மட்டுமில்லாது ஏராளமான வணிக நிறுவனங்களும் செயல்படுகின்றன. அந்த நிறுவனங்களுக்கு வந்து செல்லக்கூடியவர்களும் குப்பை தொட்டி வைத்ததால் வந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டடனர்.

ஆர்பி.உதயகுமார் சட்டசபை கூட்டத்தொடரில் இன்று பங்கேற்றதால் அவர் அலுவலகத்துக்கு வரவில்லை. ஆனால், குப்பை தொட்டி வைத்த விவரம் கேள்விப்பட்ட அதிமுகவினர் ஆர்பி.உதயகுமார் அலுவலகம் முன் திரள தொடங்கியதால் பதறிப்போன மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக அந்த குப்பை தொட்டியை அகற்ற பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர். அதனால், குப்பை தொட்டி வைத்த ஊழியர்களே விரைந்து வந்து எடுத்து சென்றனர். மேலும், சம்பந்தப்பட்ட வணிக வளாக உரிமையாளரும், மாநகராட்சியை தொடர்பு கொண்டு சொத்துவரி செலுத்திவிடுவதாக சொன்னதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி வருவாய்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்த கட்டிடம் தனியாருக்கு சொந்தமான வணிக கட்டிடம்‌. கடந்த 3 ஆண்டுகளாக கட்டிடத்துக்காக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குப்பை வரி உள்ளிட்ட ரூ. 9 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதால் வணிக கட்டிடத்தின் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஊழியர்கள் குப்பை தொட்டியை இறக்கி வைத்து விட்டுசென்றுள்ளனர். அங்கு ஆர்பி.உதயகுமார் அலுவலகம் இருப்பதே அதிகாரிகளுக்கு தெரியாது.

மேலும், வரி செலுத்தாமல் அதிக பாக்கி வைத்துள்ளவர்கள் அனைவர் கட்டிடங்கள் முன்பும் குப்பை தொட்டி வைக்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆர்பி.உதயகுமார் அலுவலகம் என்ற தகவல் தெரியவந்ததும், அதிகாரிகள் குப்பை தொட்டியை அப்புறப்படுத்தினர்,” என்றனர். எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சட்டப் பேரவையில் சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில் ஆர்.பி.உதயகுமாரின் அலுவலகம் முன் சொத்து வரி செலுத்தாததை காரணம் காட்டி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் ரீதியான பழி வாங்கும் நடவடிக்கையா? அல்லது தற்செயலாக எடுக்கப்பட்ட பொதுவான நடவடிக்கையா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரியை வசூலிக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதைவிட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் குப்பை தொட்டி வைப்பது போன்ற நடவடிக்கை எடுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆர்பி.உதயகுமார் தரப்பில் விசாரித்தபோது, “சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், அந்த தனியார் வணிக வளாகத்தில் செயல்படுகிறது. அவ்வளவுதான். அவருக்கும், சொத்து வரி செலுத்தாததிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது அலுவலகம் இருக்கும் இடம் கேப்டன் ராஜு என்பவருக்கு சொந்தமானது. அதில் அவர் வாடகைக்கு தான் இருந்து வருகிறார். காலையில் குப்பை தொட்டி வைக்கப்பட்டது தற்போது அந்த குப்பைத்தொட்டி அகற்றப்பட்டு விட்டது,” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE