ராமேசுவரம் கோயிலில் மயங்கி விழுந்து வட மாநில பக்தர் உயிரிழப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க தரிசனத்துக்காக வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் கட்டண தரிசன வரிசையில் வந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்தாஸ் (59). செவ்வாய்க்கிழமை அதிகாலை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க தரிசனத்திற்காக ரூ.50 கட்டணம் செலுத்தி தரிசன வரிசையில் சென்றுள்ளார். திடீரென அம்பாள் நுழைவு மண்டபம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த ராஜ்தாஸ், கோயில் காவலர்கள், கோயில் முதலுதவி மையத்தில் சேர்த்தனர். தொடர்ந்து மருத்துவர் சோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜ்தாஸ் ராமேசுவரத்திற்கு தனியாக வந்துள்ளதும், தெரிய வந்துள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தரிசன வழியில் காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதி போன்றவற்றை ஏற்படுத்த ஏற்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ராமநாதசுவாமி கோயில் முழுவதும் காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு உயிரிழந்த பக்தரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE