இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 226 நர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்படும்: புதுச்சேரி முதல்வர்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: விரைவில் காரைக்கால் திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் மத்திய அரசு அனுமதியுடன் நாட்டப்படும். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 226 நர்ஸ் பணியிடம் நிரப்பப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: ரமேஷ்(என்ஆர்.காங்): இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வெளிப்புற நோயாளிகள் அதிகமாக வருகின்றனர். ஆனால் செவிலியர்கள் குறைவாக இருப்பதால் கூடுதலாக நியமிக்கப்படுவார்களா?

முதல்வர் ரங்கசாமி: அரசு மருத்துவ கல்லுாரியில் கூடுதலாக 226 செவிலியர்களை நிரப்ப கோப்பு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவர்.

ரமேஷ்: இந்த கோப்பு சுற்றி, சுற்றி வருகிறது. தற்போது மருத்துவ கல்லுாரியில் 147 நர்சுகள் மட்டும்தான் பணியில் உள்ளனர். அவர்களால் அங்கு வரும் நோயாளிகளை சமாளிக்க முடியவில்லை. பணிச்சுமையால் அவர்கள் அவதிப்படுகின்றனர்.

அங்காளன்: தேசிய சுகாதார முகமையில் பணியாற்றும் செவிலியர்களை மருத்துவ கல்லூரியில் நியமிக்கலாம்.

முதல்வர்: தேசிய சுகாதார முகமை ஊழியர்களை அரசு துறைகளில் நியமிக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளோம். மருத்துவம் சாராத முகமை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். செவிலியர்களை நியமிக்கும் கோப்பு சுற்றி, சுற்றித்தான் வருகிறது. கல்லுாரி சொசைட்டியின் கீழ் செயல்படுவதால் பொதுக்குழுவில் செவிலியர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளோம்.

பிஆர்.சிவா(சுயே): புதுவையில் சுகாதார வசதிகளை அதிகப்படுத்துகிறீர்கள். காரைக்காலில் சுகாதார உதவி கிடைக்காமல், நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எப்போது கட்டப்படும்?

முதல்வர்: காரைக்காலில் அரசு பொது மருத்துமவனை அவசியம். இதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி பெற்று காரைக்கால் திருநள்ளாறில் அரசு மருத்துவக்கல்லுாரியுடன் கூடிய மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE