திராவிட மாடல் பொருளாதார உள்ளடக்கத்தில் உடன்பாடு இல்லை: உ.வாசுகி கருத்து

By KU BUREAU

பாஜகவின் நவீன தாராளமய கொள்கையுடன் ஒத்துப் போகும் திராவிட மாடலின் பொருளாதார உள்ளடக்கத்தில் உடன்பாடில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, புதுக்கோட்டையில் அக்கட்சியின் சார்பில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

நாட்டில் மத்திய பாஜக அரசால் பின்பற்றப்படும் நவீன தாராளமய கொள்கைகளால் வேலை வாய்ப்புகள் பறிக்கப் படுகின்றன. பொதுத் துறை தனியார் மயமாகிறது. இட ஒதுக்கீடு முறை கைவிடப்படுகிறது. விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. சாதிய ஒடுக்குமுறை தொடரச் செய்வதுடன், பெண் தொழிலார்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. உணவுப் பொருள் உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி செங்குத்தாக உயர்கிறது.

எனவே, இத்தகைய கொள்கை நம் நாட்டுக்கு தேவையில்லை. தேர்தலில் இவருக்கு அவர் மாற்று என்பது முக்கியம் அல்ல. கொள்கையில் மாற்றம் தேவை. தேர்தலில் சாதிகளை பயன்படுத்தும் கட்சிகள், சாதிகளை ஒழிக்க முன்வராது. மதத்தை பயன்படுத்தி ஆட்சி நடத்தும் பாதையில் பாஜக சென்று கொண்டு இருக்கிறது.

திராவிட மாடலின் பொருளாதார உள்ளடக்கமானது, பாஜகவின் நவீன தாராளமய கொள்கையுடன் ஒத்துப் போகிறது. அதில் உடன்பாடில்லை. எனவே, சாதாரண மக்கள் மீது வரி சுமத்தாமல் செல்வந்தர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் மீது வரி வசூலிக்கும் முறைமை கொண்டுவர வேண்டும். தேர்தலில் ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார். கருத்தரங்கில் கவிஞர்கள் நா.முத்துநிலவன், ஜீவி உள்ளிட்டோர் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE