கிருஷ்ணகிரி மலையில் 2,000 ஆண்டு பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

By KU BUREAU

கிருஷ்ணகிரி மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியங்கள் இருபது கண்டறியப் பட்டுள்ளது என அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மலையின் மேற்குப் பகுதியில் 50 அடி உயரத்தில் 80 அடி நீளமான பாறையின் அடியில், மனிதன் தங்கிய அடையாளமாகப் பழமையான வெண் சாந்து பாறை ஓவியங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் மற்றும் ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்த ராஜ் ஆகியோர் கூறியதாவது: இந்த ஓவியம் இடம்பெற்ற பாறையிலிருந்து பார்த்தால் மலையின் மேற்குப் பகுதி நிலப்பரப்பு தெளிவாகத் தெரிகிறது. பெரும்பாலும் பாறை ஓவியங்கள் இப்படி உயரமான இடத்திலிருந்து நிலத்தின் பெரும்பகுதியைப் பார்க்கும் விதத்தில் தான் அமைந்திருக்கும் என்பதற்கு இது உதாரணம்.

இந்த ஓவியங்கள் இரண்டு காலகட்டத்தில் வரையப்பட்டு இருக்கிறது. நான்கு மனிதர்கள் போரிடும் காட்சி கீழ் பகுதியில் காணப்படுகிறது. இப்போரில் இறந்த வீரனின் உருவம் அதன் மேல் பகுதியில் குதிரையில் அமர்ந்த நிலையில் கையில் வாளுடன் காணப்படுகிறது. இது வரலாற்றுக் காலத்தில் செதுக்கப்பட்ட நடுகல்லின் முன்னோடி எனலாம். இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஓவியங்கள்.

இதற்கு இடது பக்கமாக வரையப்பட்டுள்ள 2 ஓவியங்கள் பிற்காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட ஓவியங்கள் என்பதை அதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்ணத்தின் தன்மையைக் கொண்டும், வரையப்பட்டுள்ள உருவங்களையும் கொண்டு அறிய முடிகிறது. இதில், யானையும் அதன் மீது அம்பாரியும் காட்டப்பட்டுள்ளது.

அதற்கு மேல் தேர் ஓவியமும் வரையப்பட்டுள்ளது. தேர் சிறப்பான அலங்கார நிலையில் உள்ளது. இது ஒரு மங்கல நிகழ்வாக இருக்கும். இத்தகைய தேர் அலங்கார ஓவியங்கள் இந்த மலையிலேயே இரண்டு இடங்களில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வில், தொல்லியல் அலுவலர் பரந்தாமன் மற்றும் பாலாஜி, தருமன், விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE