அண்ணாமலை கைதுக்கு எதிராக கிருஷ்ணகிரி, தருமபுரியில் ஆர்ப்பாட்டம்: பாஜகவினர் 265 பேர் கைது

By KU BUREAU

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதைக் கண்டித்தும், டாஸ்மாக் ஊழல் செய்த தமிழக அரசைக் கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 105 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜ்க கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அண்ணாமலை கைதை கண்டித்தும், டாஸ்மாக் ஊழலை கண்டித்தும் முழக்கமிட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி கவுன்சிலர் சங்கர், நகரத் தலைவர் விமலா, ஒன்றிய தலைவர் பழனி உள்ளிட்ட 21 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

ஓசூரில்...: ஓசூர் ராம் நகரில் மேற்கு மாட்ட பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி மாநில துணைத் தலைவர் நரேந்திரன் உள்ளிட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, பர்கூர், போச்சம்பள்ளி, மத்தூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 105 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் 160 பேர் கைது: இதுபோல, தருமபுரி மாவட்டத்தில் பாஜக-வினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி நகரில் 4 ரோடு அருகில் கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 1 பெண் உட்பட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதேபோல, பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நகர தலைவர் கணேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 28 பேர், கம்பைநல்லூரில் பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட 37 பேர், பென்னாகரத்தில் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் வர்மா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரூரில் பாஜகவினர் கைது: இதுபோல, அரூரில் நகர பாஜக செயலாளர் ஜெய்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை அரூர் நகர போலீஸார் தடுத்து கைது செய்தனர். கடத்தூரில் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட துணைத் தலைவர் சிவன், சிற்றரசு, ரகு நாத், பிரவீன் குமார், சிங்காரம், கோபி ஆகியோரும், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்டல் பொறுப்பாளர் பிரவீன் குமார் தலைமையில் நந்தகுமார், பிரவீன், கலைவாணன், மகாதேவன், காந்திமதி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS