பேரவை தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: அதிமுக உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்பும் செயல் - முதல்வர் ஸ்டாலின்

By KU BUREAU

சென்னை: உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்ப பேரவைத் தலைவருக்கு எதிராக அதிமுக இப்படி ஒரு தீர்மானமா கொண்டு வரவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த பேரவைத் தலைவரை பதவியில் இருந்து நீக்க கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பேரவைத் தலைவர், ஜனநாயகக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர் மனம் வருந்தாத அளவில், தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்பவர். நேர்மையாக கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கும் பண்பு கொண்டவர்.

அவரது நடுநிலையோடு நிற்கும் நேர்மை திறனும், அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பழகும் பாங்கும் என்னை கவர்ந்த காரணத்தால்தான் அவரை இப்பதவிக்கு நான் முன்மொழிந்தேன். ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் அப்பாவு. கனிவானவர். அதேநேரத்தில் கண்டிப்பானவர். இவை இல்லாவிட்டால் அவையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்த இயலாது.

இந்த அவையில், என்னுடைய தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ, பேரவை நடவடிக்கைகளில் இல்லாத வகையில்தான் பேரவைத் தலைவர் அப்பாவு நடக்கிறார். கடந்த காலங்களில் நடைபெற்றதுபோல் அல்லாமல், ஜனநாயக அமைப்பின் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றே என நினைத்து செயலாற்றி வருகிறார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பாசம், பற்று கொண்டு செயல்படுபவர் பேரவைத் தலைவர் என்பதை மனச்சாட்சியுடன் சிந்திப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் தர வேண்டும். அவர்கள் இந்த அரசின் செயல்பாட்டினை செம்மைப்படுத்துபவர்களாக உள்ளவர்கள்.

கடந்த ஜன.10-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் 1 மணி நேரம் 51 நிமிடம் பேசினார். அதிமுக உறுப்பினர்கள் உரையாற்றுகையில் அமைச்சர்கள் விளக்கம் அளிக்க எழுந்தால், உரையை முடித்த பிறகு விளக்கம் அளிக்கலாம் என அமர வைத்துள்ளார் பேரவைத் தலைவர்.

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முன்வரிசைத் தலைவர்கள் எழுந்தால் உடன் அனுமதி அளித்திடுவார். இதை பெருமையாகவே சொல்கிறேன். சுதந்திர காற்றை இந்தப்பேரவை தற்போது சுவாசிக்கிற காரணத்தால், பேரவை தலைவர் செயல்பாட்டினை எண்ணி மகிழ்ச்சியுற்றுள்ளேன். பேரவைத் தலைவராக மட்டுமல்ல, பேரவை கடைப்பிடிக்க வேண்டிய பண்பாட்டின் தலைவராக அப்பாவு அவர்கள் செயல்பட்டுள்ளார். பல நாட்களில் திமுக உறுப்பினர்களை பட்டியலிட்டும் இன்னொரு நாள் பேசலாம் என்றும் சொல்லி இருக்கிறார்.

பேரவைத் தலைவரின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக முடியாவிட்டாலும், மனதுக்குள் பாராட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் இப்படி ஒரு தீர்மானமா கொண்டு வருவது. உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அதை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா என்ற விவாதத்தை வெளியில் உள்ளவர்கள் நடத்தட்டும். நாம் நடத்த வேண்டாம்.

ஆனால் இப்படி ஒருவர் மீது இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தோமே என்று எதிர்காலத்தில் உங்கள் மனச்சாட்சி உறுத்தும். பேரவைத் தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை இந்த அவை ஏற்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE