தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக புகார்: அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்கு ரத்து

By KU BUREAU

சென்னை: தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018-ம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் திமுகவினர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சரரக உள்ள சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர்.

மேலும், கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத்தாண்டி பிரச்சாரம் செய்ததாக அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி அமைச்சர் சிவசங்கர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் பெரியகருப்பன் மீது சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரிய கருப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி, அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE