மீட்டர்களை கூடுதல் விலைக்கு விற்றால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின்வாரியத்துக்கு உத்தரவு

By KU BUREAU

மின்சார மீட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு விற்றால், அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மின் இணைப்பு வழங்கும்போது, மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. இதற்கான கட்டணம் நுகர்வோரிடம் வசூலிக்கப்படுகிறது. மேலும், பழுதடைந்த மீட்டர்களை மாற்றித் தர காலதாமதம் ஆவதால், நுகர்வோர் அதிக மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

எனவே, விரைவாக மின் இணைப்பு வழங்குவதற்கும், குறைபாடு உடைய மீட்டரை மாற்றவும் விண்ணப்பித்த நபரே, தனியார் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மீட்டர்களை வாங்க அனுமதிக்குமாறு மின் வாரியத்துக்கு, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மீட்டர் வாங்க வேண்டும் என்ற பட்டியலை மின்வாரியம் வெளியிட்டது. எனினும், அந்நிறுவனங்களிடம் இருந்து மீட்டர் வாங்கிக் கொடுத்தாலும், அதை மின்வாரிய அலுவலகங்களில் ஏற்பதில்லை எனப் புகார் எழுந்தது.

இந்நிலையில், நுகர்வோர் வாங்கித் தரும் மீட்டரை ஏற்பதுடன், மீட்டர் விற்பனையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களின் விவரங்களை வெளியிடுமாறு, மின்வாரியத்துக்கு, ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மின்வாரியத் தலைவருக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

புதிய மின் இணைப்புக்கு நுகர்வோர் வாங்கித் தரும் மீட்டர் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற தகவல் வருகிறது. மேலும், குறைபாடு உடைய மீட்டரை மாற்றித் தர தாமதிக்கும் பட்சத்தில், அந்த நுகர்வோர் வாங்கித் தரும் மீட்டரும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பது விதிகளை மீறும் செயல்.

நுகர்வோர் நேரடியாக மீட்டர் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் வெளியிட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஒன்றிரண்டுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. ‘100ஏ’ மீட்டருக்கு ஒரே நிறுவனம் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே நிறுவனம் என்பதால் முழு சந்தையையும் கட்டுப்படுத்தி நுகர்வோரிடம் அதிக விலைக்கு, அதாவது மின்வாரியம் அங்கீகரித்த ரூ.8 ஆயிரத்துக்குப் பதில் ரூ.17,582 வசூலிக்கப்படுகிறது. எனவே, மீட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு விற்றால், அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மீட்டரை விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களின் விவரங்களையும் வெளியிட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நிறுவனங்கள் இருக்க வேண்டும். மீட்டர் செயல்பாட்டு வழிமுறைகளை ஒரு மாதத்துக்குள் மாற்றி அமைக்க வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 92 நிறுவனங்களின் பட்டியலை மின்வாரியம் வெளியிட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE