பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25-ம் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கம் ஸ்டிரைக்

By KU BUREAU

‘‘வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்’’, என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, வங்கிகளில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் கோபம் அடைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பொதுமக்களின் தாக்குதலில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆயுதம் தாங்கிய காவலர்களை அமர்த்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும்.

ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். வங்கிகளில் அயல்பணி மூலம் வெளியாட்களை பணி நியமனம் செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24 மற்றும் 25-ம் தேதிகளில் 48 மணி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இவ்வாறு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, அகில இந்திய வெளிநாட்டு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பாலாஜி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த செந்தில் ரமேஷ், ரவிக்குமார், இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த தவே உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE