‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூல் - இணைய பக்கம்: முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார்

By KU BUREAU

தமிழக நிதித்துறை தயாரித்துள்ள ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ என்ற ஆவண நூலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கான சிறப்பு இணையப் பக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சங்ககாலம் முதல் தற்போதைய சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் நிதி நிர்வாகச் சிறப்புகளின் பெருந்தொகுப்பாகவும் வரலாற்று ஆவணமாகவும் ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், காலனிகால நிதி நிர்வாக நடைமுறைகள், நவீன தமிழகத்தின் நிதிநிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.

அரிய தகவல்களும் தரவுகளும் நிறைந்துள்ள இந்நூல் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வந்த வரலாற்றையும், தமிழகத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.

இந்த ஆவண நூலில், பொருளியல், வரலாற்றுத் துறைகளைச் சேர்ந்த தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய சிறப்புமிக்க இந்நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார்.

இணைய பக்கம் தொடக்கம்: ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூலையொட்டி சேகரிக்கப்பட்ட, நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், மத்திய-மாநிலத் திட்டக் குழுக்களின் ஆய்வறிக்கைகள், நிதிநிலை அறிக்கை தொடர்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள், ஒளிப்படங்கள் அனைத்தும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலகச் சிறப்பு இணையப் பக்கத்தில் () தொகுக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு இணையப் பக்கத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பொருளியல், சமூகவியல், அரசியல், வரலாறு என பல்வேறு துறைசார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள இவை உதவும். முதல்வர் வெளியிட்ட ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூலை இந்த இணையப் பக்கத்தில் வாசிக்கலாம்.

இந்நிகழ்வில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன், துணைச் செயலர்கள் பிரத்திக் தாயள், செ.ஆ.ரிஷப், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநர் ரெ.கோமகன், நூலுருவாக்க குழுவைச் சேர்ந்த முதல்வரின் துணைச் செயலாளர் த.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE