பட்டியல் சமூக தலைவர்கள் எங்கள் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு வரவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

By KU BUREAU

விழுப்புரம்: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டில் பட்டியலின தலைவர்களும் கலந்துக்கொள்ளுங்கள். பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்வார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

திண்டிவனத்தில் இன்று வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு மே 11-ம் தேதி நடைபெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “அனைத்து மக்களுக்காக பாடு படுகின்ற கட்சி பாமக. 18 சதவீத இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். இப்போதுள்ள பட்டியலின தலைவர்களை கேட்டுக்கொள்வது என்னவெனில் நீங்களும் மாநாட்டில் கலந்துக்கொள்ளுங்கள்.

பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்வார்கள். அரசும், காவல்துறையும் வழிகாட்டுதலின் பேரில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காவல்துறையும், அரசும் பாராட்டும் அளவில் மாநாடு நடைபெறும். அண்ணா சொன்னது போல் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் பட்டியல் சமூகத்தினரை வாழ்த்து சொல்லி அனுப்புங்கள்.

தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து பேசி வருகிறேன். எல்லா சமூகத்தினருக்கும் பாடுபடும் ஊழியனாக 45 ஆண்டுகளாக போராடி வருகிறேன். 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதிவாரி கணக்கெடுப்பு க்கு ஆதரவு கொடுக்க கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் 364 சாதிகள் உள்ளது. அத்தனை மக்களுக்காகவும் என்னை போல் பாடுபட்ட தலைவரை சொல்லுங்கள். ஆட்சியில் அமராமல் இந்த மக்களுக்கு, அவர்களின் பிரச்சினைகளுக்கு பாடுபட்டவர்களை சொல்ல முடியுமா ?

இந்த மாநாடு 364 சமுதாயத்திற்கும் ஒரு செய்தியை சொல்லும். அவர்களுக்கு அரணாக இருக்கும். வன்னியர் மாநாட்டிற்கு நாம் எப்படி செல்வது என யோசிக்காதீர்கள், முடிந்த அளவு நீங்களும் வாருங்கள், 364 சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்களும் கலந்துக் கொள்ளுங்கள். பல சமுதாய தலைவர்களை நாங்கள் அழைப்பதுண்டு. 1998ல் மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்” என்று ராமதாஸ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE