விருதுநகர் மாவட்டத்தில் கொடுக்காய்புளி கிலோ ரூ.350-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடுக்காய் புளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வெயிலினால் ஏற்படும் சூட்டு கொப்பளங்கள், உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள், சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி, வாய்ப்புண் போன்றவற்றுக்கு கொடுக்காய் புளி பழம் மருந்தாகவும் பயன்படுகிறது. கொடுக்காய் மரத்தின் பட்டைகளிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடுக்காய்புளி விளைச்சல் குறைவாக இருந்தது. பூக்கும் மற்றும் காய்ப்பிடிக்கும் பருவத்தில் மழை அதிகமாக இருந்ததால் பூக்கள் அதிக அளவில் உதிர்ந்துவிட்டன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருப்பதுடன், கட்டுப்படியாகும் விலை கிடைப்பதால் கொடுக்காய்புளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டியைச் சேர்ந்த கொடுக்காய்புளி விவசாயி கே.சின்னப்பாண்டி கூறியதாவது: 10 ஏக்கர் பரப்பளவில் கொடுக்காய்புளி சாகுபடி செய்துள்ளேன். நாளொன்றுக்கு 100 கிலோ வரை மகசூல் எடுக்க முடிகிறது. ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வற்றிய போதும் சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடியை மேற்கொண்டு வருகிறேன். ஆனாலும், குறைந்த அளவு தண்ணீரே இதற்குப் போதுமானது. பொதுவாக மார்கழி மாதத்தில் பூப்பிடித்து தை மாதத்தில் காய் பிடிக்கத் தொடங்கும்.
» பிரிந்தவர்கள் ஒன்றுசேர்ந்தால் 2026ல் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம்: ஓபிஎஸ் நம்பிக்கை
» வாகன ஓட்டிகள் சிரமம்; சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்த தூத்துக்குடி எஸ்ஐ-க்கு பாராட்டு
மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் தொடர்ந்து விளைச்சல் இருக்கும். இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகள் வந்தும் மொத்தமாக கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர். கொடுக்காய் புளி தரம் வாரியாக பிரிக்கப்பட்டு தற்போது ஒரு கிலோ ரூ.200 முதல் அதிகபட்சமாக ரூ.350 வரை விற்பனையாகிறது என்று கூறினார்.