விலை கடும் வீழ்ச்சி; ரூ.4க்கு விற்பனையாகும் தக்காளி - வேதனையில் விவசாயிகள்

By KU BUREAU

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள முத்தனூர், அஸ்தகரியூர், கெடகார அள்ளி, சில்லார அள்ளி, லிங்கநாயக்கனஅள்ளி, மணியம்பாடி, ரேகடஅள்ளி, மெனசி, பூதநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தக்காளியை விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் அதிகரித்து மண்டிகளுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை வேகமாக சரிந்து வருகிறது. 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.500-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.100-க்கு விற்பனையாகிறது. அறுவடை கூலிக்கு கூட விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். வாகனங்களில் தக்காளி விற்பனை செய்யும் சில வியாபாரிகள் தோட்டத்தில் பறிக்காமல் உள்ள தக்காளியை தோட்டத்துக்கே வந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் கடத்தூர் பகுதியில் நேற்று ஒரு பெட்டி தக்காளி ரூ.20 விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE