தொழிலாளர்களின் பேராதரவு பெற்றவர் திருப்பூர் துரைசாமி: கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் புகழாரம்

By KU BUREAU

தொழிலாளர்களின் பேராதரவு பெற்றவர் திருப்பூர் சு.துரைசாமி என்று கோவையில் நடந்த பாராட்டு விழாவில் தொழிற்சங்க நிர்வாகிகள் புகழாரம் சூட்டினர்.

கோவை மாவட்ட பஞ்சாலை தொழிற்சங்கங்கள் சார்பில், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், கோவை, ஈரோடு மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளருமான திருப்பூர் சு.துரைசாமியின் 65 ஆண்டுகால தொழிற்சங்கப் பணிக்காக கோவையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

ஹெச்எம்எஸ் மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜாமணி வரவேற்றார். ஏஐடியுசி பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். கோவை, ஈரோடு மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் மு.தியாகராசன் சிறப்புரையாற்றினார். தொழிற்சங்கங்கள் சார்பில் சு.துரைசாமிக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் கல்வியாளர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசும்போது, "தொழிற்சங்கத் தலைவராக 65 ஆண்டுகள் பொறுப்பு வகித்த சு.துரைசாமியின் சேவை வியக்கவைக்கிறது. கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள், முதலாளிகளிடையே பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் பக்குவம் இருந்தது. ஆனால், 1991-ல் புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்ட பின்னர் அனைத்தும் மாறின. தற்போது இந்தியாவின் சாதனையை உலகமே வியக்கிறது. இன்றைய இளைஞர்களிடம் சமூக சிந்தனை இல்லை, இது ஆரோக்கியமானதல்ல. அவர்களுக்கு கல்வியுடன் பண்பாட்டைக் கற்றுத் தர வேண்டும். நமது பண்பாடு, கலாச்சாரம், மொழியை தொலைத்துவிட்டு உலகை ஆளலாம் என்று கருதுவது முட்டாள்தனம்” என்றார்.

ஹெச்எம்எஸ் மாநிலச் செயலாளர் ராஜாமணி பேசும்போது, “பிரச்சினைகளை பொறுமை, விவேகத்துடனும் எதிர்கொள்ளும் திறன்கொண்ட சு.துரைசாமி, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். ஏறத்தாழ 65 ஆண்டுகள் பஞ்சாலைத் தொழிற்சங்கத்தில் செயல்பட்டு வரும் இவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை" என்றார்.

மூத்த வழக்கறிஞர் என்.வி.நாகசுப்பிரமணியன், தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் (ஓய்வு) பி.மாரிமுத்து மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர். சு.துரைசாமி ஏற்புரையாற்றும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டபோது, முன்னாள் அமைச்சர் ராசாராம் ‘ஆளும்கட்சியில் இருந்துகொண்டு நாம் போராடுவது ஏற்புடையதாக இல்லை’ என்றார். அவரிடம் ‘கட்சி வேறு, தொழிலாளர் நலன் வேறு’ எனக் கூறி எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE