தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து டெல்டா பகுதி விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
தமாகா விவசாயப் பிரிவு பொருளாளர் வயலூர் ராஜேந்திரன்: தஞ்சை மாவட்டத்தில் 2 இடங்களில் நெல் ஈரப்பதம் நீக்கும் கருவிகள் அமைக்கப் படும், 3 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும். மாவட்டந்தோறும் வேளாண் ஆய்வுக்கூடம் என்பதை மாற்றி, வட்டார அளவில் அமைக்க வேண்டும்.
நிதி ஒதுக்கீடுகள் இல்லாத பட்ஜெட் என்பதால் இது வெறும் காகித பட்ஜெட்டாக இருக்கிறது. கடந்த கால அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. வைகை- காவிரி- குண்டாறு, காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. மொத்தத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசின் முத்திரையை குத்தியது போன்று இந்த வேளாண் பட்ஜெட் உள்ளது.
காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் மீனம்பநல்லூர் ஸ்ரீதர்: விவசாயிகளை சென்றடைய கூடிய நேரடியான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எந்த ஒரு முன்னோடி திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதே போல தான், இந்த பட்ஜெட்டிலும் புதிதாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை செயல்படுத்தப்படுமா என்பது சந்தேகம்தான். டிராக்டர் மானியம் 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதைக் கூட தரவில்லை. விதை மானியம், உழவு மானியம் என்று எத்தனையோ திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், அவை விவசாயிகளை நேரடியாக சென்றடையவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் எங்களுடைய எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறவில்லை.
» ஓராண்டு சிறை தண்டனை பெற்ற ஜவாஹிருல்லா எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி
» வேளாண் பட்ஜெட்டில் பெரியாறு வைகை பாசனம் புறக்கணிப்பு: விவசாயிகள் வருத்தம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன்: இது கொஞ்சம் இனிப்பும், கொஞ்சம் கசப்பும் கலந்த பட்ஜெட். டெல்டாவுக்கு குறுவை தொகுப்பு ரூ.58 கோடி ஒதுக்கீடு, நிலம் இல்லாத விவசாயிகள் விபத்தில் இறந்தால் ரூ.2 லட்சம், காயமடைந்தால் ரூ.ஒரு லட்சம் நிவாரணம், வேதாரண்யம் முல்லைப் பூவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை, டெல்டா மாவட்டங்களில் 22 இடங்களில் நவீன நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால், காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், தூர் வார கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்: வேளாண் பட்டதாரிகள் மூலம் 1000 உழவர் சேவை மையம் அமைக்கப்படும், டெல்டா தவிர மற்ற மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க ரூ.102 கோடியில் சிறப்பு திட்டம், இயற்கை விவசாயம், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகள், தோட்டக்கலை பயிர் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் போன்றவை வரவேற்கத்தக்கது. இந்த வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் மூலம், வேளாண் வளர்ச்சியில் நாட்டில் 2-வது இடத்தில் உள்ள தமிழகம் முதல் இடத்துக்கு வர வாய்ப்புள்ளது.
மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு தலைவர் தங்க சண்முக சுந்தரம்: விவசாய கடன்கள் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு இல்லை. பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏற்றம் தரும் திட்டங்கள் இல்லை. வேளாண் தொழிலுக்கு இடையூறு தரும் மான், மயில், குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு கிடைக்கும் வகையில் வனப்பகுதியில் சிறுதானியங்களை விதைக்கும் திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும். விவசாயிகள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்திருக்கலாம். இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருட்களை கொள்முதல் செய்ய எந்தவொரு திட்டமும் இல்லை.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன்: முந்திரி வாரியம் அமைத்து ரூ.10 கோடி நிதி, பலா உற்பத்தியை ஊக்கப்படும் ரூ.2.50 கோடி, மக்காச்சோளம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.42 கோடி, உழவு மானியம் எக்டேருக்கு ரூ.2 ஆயிரம், நுண்ணுயிர் பாசன திட்டத்தை ஊக்கப்படுத்த ரூ.1,168 கோடி, நீர்வளத்துறை மூலம் ஏரி, ஆறுகளை புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.9,460 கோடி ஒதுக்கீடு, இயந்திரங்கள் வாங்க மானியம் 50-லிருந்து 60 சதவீதமாக உயர்வு ஆகிய திட்டங்கள் பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.
இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி: காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள நிதி ஒதுக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை வேளாண் துறை சார்பில் சந்தைப்படுத்துவதற்கன எந்தத் திட்டமும் இல்லை. அனைவருக்கும் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவும் உறுதியான அறிவிப்பு இல்லை.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.எம்.ராமலிங்கம்: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ. 841 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம் இந்தத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்க 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்குவது, மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்க ரூ.8.51 கோடி ஒதுக்கீடு, ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி, இயற்கை வேளாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன்: வேளாண் திட்டங்களுக்கு கடந்த முறையைவிட கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை தூர் வார நிதி ஒதுக்கியிருப்பதும், வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதும் வரவேற்கத்தக்கது.
கரும்பு டன்னுக்கு ஊக்கத் தொகை ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் நெல் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்க ளுக்கு கொள்முதலுக்கு கூடுதல் விளை அறிவிக்கப்படாதது ஏமாற்றம் தருவதாக உள்ளது. இயற்கை பேரிடர் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவி புரியும் நிவாரணம் தொடர்பான அறிவிப்புகள் இல்லாததும் அதிருப்தி அளிக்கிறது.