பெரியாறு அணை மராமத்து மற்றும் இப்பாசன கால்வாய்கள் தூர்வாருதல், சீரமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை மராமத்து மற்றும் பிரதான மற்றும் நீட்டிப்பு கால்வாய்கள் தூர்வார நிதி ஒதுக்காதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறுகையில், பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவதிலும், மராமத்து செய்வதிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இதனால் மராமத்து பணிகளில் சிரமம் இருக்காது என்று நினைத்தோம். இந்நிலையில் இதற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்த அணையை நம்பி 5 மாவட்டங்களிலும் ஏராளமான பிரதான மற்றும் நீட்டிப்பு கால்வாய்கள் உள்ளன. அதனை தூர்வாரவோ, மேம்படுத்துவதற்கோ எந்த திட்டமும் இதில் இல்லை.
» தமிழக வேளாண் பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் - விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கருத்து
» “டாஸ்மாக் விவகாரத்தில் வசமாக சிக்கியது திமுக” - பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் கருத்து
ஏற்கெனவே பெரியாறு அணை பாசனத்தில் முப்போகம் விளைந்த நிலையில் தற்போது இரு போகம், ஒரு போகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இப்பாசன மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு இல்லாதது வேளாண் உற்பத்தியில் மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.