‘50 தொகுதிகளில் தலையெழுத்தை நாங்கள் நிர்ணயிப்போம்’ - ஆசிரியர் சங்க கூட்டமைப்பு

By KU BUREAU

‘50 தொகுதிகளின் தலையெழுத்தை நாங்கள்தான் நிர்ணயிப்போம்’ என அகில இந்திய ஆசிரியர் சங்க கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆசிரியர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்ற பின்னர், அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு செயலாளர் (ஐபெட்டோ) அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக மட்டும் முதல்வர் ஸ்டாலின் கூறவில்லை. நீதிமன்றத்தில் கூறுவதை போன்று சத்தியம் என்றே கூறினார். ஏற்கெனவே அமைக்கப்பட்ட 2 குழுக்கள் முடிவுகளே அறிவிக்காத நிலையில், ஓய்வூதியத் திட்டத்தை ஆராய மற்றொரு குழுவை அமைத்துள்ளனர். அரசு குழு அமைப்பதே ஒரு பிரச்சினையை ஒத்திவைக்கத்தான் என்று கருணாநிதியே கூறியுள்ளார்.

வாக்குறுதி அளிக்காத 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளனர். நாட்டிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறோம், கனடா போன்ற நாடுகள்கூட நம்மைதான் பின்பற்றுகின்றன என்று கூறும் முதல்வர், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திமுகவினர் மிசாவை பார்த்ததைபோல், நாங்களும் டெஸ்மா போன்ற சட்டங்களை பார்த்துள்ளோம்.

ஆசிரியர்களை 40 நாட்கள் சிறையில் வைத்ததால், எம்ஜிஆர் உள்ளாட்சித் தேர்தலில் தோற்றார். ஒரே நாளில் ஒன்றே முக்கால் லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஜெயலலிதா, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்றார். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கட்டுப்படுத்திய பழனிசாமி, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்றார்.

அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு போன்றோர் தபால் வாக்குகளில்தான் வெற்றி பெற்றனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அரசு திட்டங்களை கொண்டுசெல்லும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றாமல், எத்தனை கூட்டணி இருந்தாலும், திட்டங்களை அறிவித்தாலும் பயனில்லை. எங்களது குடும்பத்திலும் ஒன்றரை முதல் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 50 தொகுதிகளின் தலையெழுத்தை நாங்கள்தான் நிர்ணயிக்க முடியும்.

2026 ஏப்ரல் 1 முதல் சரண்டர் விடுப்பு தருவதாக திராவிட மாடல் அரசு தாமதமாக அறிவித்துள்ளது. மக்களை மூளைச் சலவை செய்யவே இந்த அறிவிப்பை அறிவித்துள்ளனர். சட்டப்பேரவையில் பழைய ஓய்வூதியத் திட்டம், சரண்டர் விடுப்பை 2025ல் இருந்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE