தமிழக வேளாண் பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் - விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கருத்து

By KU BUREAU

தமிழக அரசின் 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட விவசாய சங்கங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி: ரூ.10 கோடியில் முந்திரி வாரியம், 50 முக்கிய உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.8 கோடி, ரூ.50 கோடியில் 100 வேளாண் விலை பொருட்கள் மதிப்பு கூட்டு மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிபை வரவேற்கிறோம்.

களஞ்சியம் விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணியம்: அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிலை 2, பாண்டியாறு புன்னம்புழா திட்டம், ஆனைமலை நல்லாறு திட்டம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான நியாயவிலைக் கடைகளில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக, உள்ளூர் விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற பொருட்களை விநியோகம் செய்வது குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமே.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் காளிமுத்து: மேற்கு மாவட்டங்களில் நீராதாரங்களை பெருக்க அணைகள் தூர் வாருவது, ஆனைமலையாறு நல்லாறு திட்டம், உள்நதி நீர் இணைப்பு திட்டம் என எந்தவொரு அறிவிப்பும் அறிவிக்கப்படாதாதது ஏமாற்றமே.

பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்: தமிழக அரசு நிறுவனங்கள் அனைத்தும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. வேளாண் பட்ஜெட் என்பது வெற்றுக் காகிதம் மட்டுமே. எந்தவித பயனும் விவசாயிகளுக்கு இதனால் இல்லை. விவசாயிகள் மீது திமுகவுக்கு அக்கறை கிடையாது.

தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியதாவது: திருப்பூர், கோவை மாவட்டங்களில் தென்னையை தாக்கும் ரூகோஸ், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ தாக்குலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டம் ஒட்டுண்ணி உற்பத்தி மையங்களை அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கக்கூடியது. தென்னை நோய் தடுக்க புதிய மருந்துகள், ஆய்வுகள் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமாகா திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் சி.காளிதாஸ்: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான அமராவதி அணையின் மேல் பகுதியில் அப்பர் அமராவதி அணை திட்டம் பட்ஜெட்டில் பரிசீலிக்கப்படவில்லை. மொத்தத்தில் விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்காத சராசரியான பட்ஜெட். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE