தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 9 மாவட்டங்களில் 28 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் அமைக்கப்படும் என தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரி்விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு: விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.525 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களிருந்து நெல்லை பாதுகாக்க தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் 49 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 நவீன நெல்சேமிப்பு வளாகங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. உணவு மானியத்துக்கு ரூ.12,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பசுந்தாள் உர விதைகள் விநியோகம், மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த பண்ணையம், வேளாண் காடுகள் உருவாக்குதல், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் போன்ற 15 திட்டக்கூறுகளுடன் ரூ.142 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மீதமுள்ள 2,338 கிராம ஊராட்சிகளில் ரூ.269.50 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் ரூ.40 கோடியே 27 லட்சத்தில் மத்திய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களின் பரப்பை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் வித்துகள் இயக்கம் ரூ.108 கோடியே 6 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது 2027-28-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு திட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்படுகிறது. இதற்காக ரூ.52.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு இல்லாத சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்திலும் என 1000 விவசாயிகளுக்கு ரூ.24 கோடியில் சூரியசக்தி பம்புசெட்டுகள் அமைத்து தரப்படும்.
இயந்திரமயமாக்குதலுக்காக ‘அட்மா’ திட்ட ஒருங்கிணைப்பும் திட்டம் ரூ.3.85 கோடியில் செயல்படுத்தப்படும். வேளாண் பொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்கும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இயற்கை வேளாண்மையை 37 மாவட்டங்களில் பரவலாக்க ரூ.12 கோடி ஒதுக்கப்படும். இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் இரண்டாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும். இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்த உரிய வசதிகள் செய்து தரப்படும். சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது 3 பேருக்கு பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். 2025-26-ம் ஆண்டில், ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டத்துக்கு ரூ.12.50 கோடி ஒதுக்கப்படும்.
நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளில் உயர் விளைச்சல் தரவல்ல விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விதைகளைக் காலத்தே வழங்கிட 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள், ரூ.15.5 கோடியில் புதியதாக நிறுவப்படும். விவசாயிகளுக்குத் தரமான விதைகள் தொடர்ந்து கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்