மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக அரசு ரத்து செய்ய கோரி போராட்டம் அறிவிப்பு

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: கார்ப்பரேட் நிறுவனங்கள் சுங்கச்சாவடி அமைத்து வரி வசூலிக்க வழிவகுக்கும் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்ச் 26-ல் தமிழக முதல்வரிடம் கோரிக்கை சாசனம் வழங்கும் இயக்கமும், ஏப்.1-ல் அரசாணையை தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடத்த இன்று மதுரையில் நடந்த நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், துணைத்தலைவர் து.சிங்கராயன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் த.மனோகரன் வரவேற்றார்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் க.நீதிராஜா, மாவட்டச் செயலாளர் க.சந்திரபோஸ் ஆகியோர் பேசினர். அச் சங்க மாநில நிர்வாகிகள் தி.ராஜமாணிக்கம், சு.செந்தில்நாதன், கு.பழனிச்சாமி, கோ.ஹரி பாலகிருஷ்ணன், மா.மகாதேவன், செ.சையது யூசுப் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் இரா.தமிழ் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில், தமிழக அரசு, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை (எண் 140) வெளியிட்டது. இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்து சுங்க வரி வசூல் வேட்டை நடத்தும் ஏற்பாட்டை செய்துள்ளது. மேலும், 5000 நிரந்தர அரசு பணியிடங்கள் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜன.20-முதல் பிப்.28 வரை நடத்திய கையெழுத்து இயக்க பிரதிகளுடன் மார்ச் 26-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை சாசனம் வழங்கும் இயக்கம் நடைபெறும். மேலும், நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை நடைபெறும் ஏப்.1-ம் தேதியன்று அரசாணை எண்:140-ஐ தீயிட்டுக் கொளுத்தும் இயக்கம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE