மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதை கணித்தே திமுக அரசு பட்ஜெட் தாக்கல்: அரசு ஊழியர் சங்கம் கருத்து

By KU BUREAU

மதுரை: 2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று நிதி அமைச்சர் கணித்தே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் சு.ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதுதொடர்பாக, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த பட்ஜெட்தான் திமுக அரசின் கடைசி பட்ஜெட். இந்நிலையில், ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் 1.4.2026 முதல் வழங்கப்படும் என்று நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது அரசு ஊழியர்களை முட்டாளாக கருதும் அறிவிப்பாகும். 2026 மார்ச் முதல் சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.

2026 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் வழங்கட்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு அறிவித்துள்ளனர். 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று நிதி அமைச்சரின் கணிப்பின் அடிப்படையில் இந்த ஒப்படைப்பு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ தலைவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் அரசு ஊழியர்களின் கோபத்தை தணித்து விடலாம் என்று திமுக அரசு தவறான கணக்கு போடுகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அரசு ஊழியர்களின் கோபத்தை தணிக்க முடியாது என்பதை பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.

திமுக அரசின் இப்போக்கு நீடித்தால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காது என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE