‘சீமான் பேசியதையே மக்கள் ரசித்தார்கள், பட்ஜெட்டை பார்க்கவில்லை’ - இபிஎஸ் கலகல பதில்!

By KU BUREAU

சென்னை: பட்ஜெட்டை ஒளிபரப்ப தமிழகம் முழுவதும் 950 இடங்களில் எல்இடி திரைகள் வைத்தார்கள். ஆனால் அந்த எல்இடியில் சீமான் பேசியதை பார்த்துதான் மக்கள் ரசித்தார்கள். யாரும் பட்ஜெட்டை பார்க்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

2025-26-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பட்ஜெட்டை நேரடியாக ஒளிபரப்ப தமிழகம் முழுவதும் எல்இடி திரைகள் வைக்கப்பட்டது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பட்ஜெட்டை ஒளிபரப்ப தமிழகம் முழுவதும் 950 இடங்களில் எல்இடி திரைகள் வைத்தார்கள். ஆனால் அந்த எல்இடியில் சீமான் பேசியதை பார்த்துதான் மக்கள் ரசித்தார்கள். யாரும் பட்ஜெட்டை பார்க்கவில்லை” என்றார்

2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவரங்களை பொதுமக்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில், அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எல்இடி திரை அமைக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பட்ஜெட்டை ஒளிபரப்ப அமைக்கப்பட்ட எல்இடி திரையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்பட்டது பெரும் சலசலப்பை உருவாக்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE