மாணவனை அடித்த சம்பவம்: பொள்ளாச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்

By KU BUREAU

கோவை: பொள்ளாச்சி அருகே 3-ம் வகுப்பு மாணவனை, அவரது சகோதரியை வைத்து பிரம்பால் அடிக்க வைத்த சம்பவத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடம் மாற்றப்பட்டார்.

பொள்ளாச்சி அடுத்த ஜமீன் முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 3-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒரு குறும்பு செய்ததால், பள்ளி தலைமை ஆசிரியை திலகவதி என்பவர், அதே பள்ளியில் பயின்று வரும் மாணவனின் சகோதரியிடம் பிரம்பை கொடுத்து மாணவனை அடிக்க கூறியுள்ளார். மாணவி அடித்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பொள்ளாச்சி வட்டார கல்வி அலுவலர் சர்மிளா விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் தங்கராசு, தலைமை ஆசிரியை திலகவதியை போடிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணியிடம் மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE