பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி: இந்தி எதிர்ப்பு விவகாரம் திகுதிகு!

By KU BUREAU

சென்னை: மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்

தமிழ்நாட்டில் இந்தி வேண்டாம் என எதிர்க்கிறார்கள். அப்புறம் ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப் செய்கிறார்கள். திரைப்படங்களை இந்தியில் டப் செய்து பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள். இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, ‘மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவை எதிர்க்கும் போது, இந்திக்கு எதிராக தெலுங்கில் பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கையும், தற்போது பாஜகவுடன் சேர்ந்த பின்னர் இந்தியை ஆதரித்து அவர் பேசுவதையும் கனிமொழி பகிர்ந்துள்ளார்.

முன்னதாக ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஜனசேனா கட்சியின் 12வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ‘தமிழ்நாட்டில் இந்தி வேண்டாம் என எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு இந்தி தேவையில்லை என்கிறார்கள். அப்புறம் ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப் செய்கிறார்கள். திரைப்படங்களை இந்தியில் டப் செய்து பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள். இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள்?.

உத்தரப்பிரதேசம், பிஹார், சத்தீஸ்கர் என இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து பணமும் தேடுகிறார்கள். மேலும், பிஹாரிலிருந்து தொழிலாளர்களையும் நம்பியிருக்கிறார்கள். அப்படியானால் இந்தியை வெறுக்கிறோம் என்பது எப்படி நியாயமாக இருக்கும். அதேபோல சிலர் சமஸ்கிருதத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என புரியவில்லை. இந்தியாவுக்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உட்பட பல மொழிகள் தேவை. பல மொழிகள் என்பது நம் நாட்டுக்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், "உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்" என்று சொல்வது, வேறொரு மொழியை வெறுப்பது அல்ல, அது "நம் தாய்மொழியை, நம் தாயை சுயமரியாதையுடன் பாதுகாப்பது" என்று யாராவது பவன் கல்யாண் ஐயாவிடம் சொல்லுங்கள்” என்று கன்னட மொழியில் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE