‘முறைகேடு செய்ய வசதியான திட்டங்களைத் தவிர வேறெதுவும் இல்லை’ - வேளாண் பட்ஜெட் பற்றி இபிஎஸ் விமர்சனம்!

By KU BUREAU

சென்னை: இந்த வேளாண் பட்ஜெட்டில் முளைக்காத விதை, உபயோகமற்ற உயிர் உரங்கள் என முறைகேடு செய்வதற்கான வசதியான திட்டங்களைத் தவிர, விவசாயிகளுக்கு பயன்படும் எந்தவிதமான திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

2025-26-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ திமுக-வினர் விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு பொருத்தமான, உதாரணமான விவசாய பட்ஜெட் இது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என்றுகூறி, ஏதோ தனி பட்ஜெட் போட்டால், விவசாயிகள் வளர்ந்து, செழித்து வளமாக வாழ்வோம் என விவசாயிகள் கனவு கண்டனர். ஆனால், அது ஒரு போலித் தோற்றம் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.

விவசாய பட்ஜெட் என்ற பெயரில் கிட்டத்தட்ட 1.45 மணி நேரம் விவசாய பட்ஜெட்டை வாசித்து சாதனை படைத்திருக்கிறார்கள். அதுதான் தமிழக வேளாண் பட்ஜெட்டின் சாதனை. இந்த விவசாய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. வேளாண்துறையைச் சாரந்த ஊரக வளர்ச்சித் துறை, பட்டு வளர்ச்சித் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை, தொழில்துறை, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அனைத்தையும் கலந்து ஒரு அவியல் போல வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய திட்டமோ, நன்மையோ இல்லை. அதிமுக ஆட்சியில், உணவு பதப்படுத்தும் பூங்கா, உழவர் உற்பத்திக் குழு போன்றத் திட்டங்களை திமுக அரசு கைவிட்டுவிட்டது. இந்த வருடத்தில் ஏதோ ஒரு சில இடங்களில் அறிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டு பட்ஜெட்களில் அவை இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட்டில் முளைக்காத விதை, உபயோகமற்ற உயிர் உரங்கள், என முறைகேடு செய்வதற்கான வசதியான திட்டங்களைத் தவிர, விவசாயிகளுக்கு பயன்படும் எந்தவிதமான திட்டமும் இல்லை.

ஆர்கானிக் ஃபார்மிங் என ஒரு துறைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டது எல்லாம் நின்றுவிட்டது. கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என ஒரு திட்டத்தை அறிவித்தார். இதில் ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு எவ்வித கூடுதல் பலனும் இல்லை.

தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிர் செய்வதாகவும், ஏற்கெனவே இருந்த சாகுபடி பரப்பை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், அவ்வாறு சாகுபடி பரப்பு உயர்த்தபடவில்லை. 2021-22 ஆம் ஆண்டு மொத்த சாகுபடி பரப்பு 63.48 லட்சம் ஹெக்டேர், அதாவது 48.7%. ஆனால் சாகுபடி செய்த பரப்பு 49.08 லட்சம் ஹெக்டேர், அதாவது 37.7% அளவில் தான் சாகுபடி செய்துள்ளனர். 2023-24-ல் கிட்டத்தட்ட சாகுபடி பரப்பு 1.2% குறைந்துள்ளது. ஆண்டுதோறும் திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

10 லட்சம் ஹெக்டேர் அளவுள்ள இருபோக சாகுபடி நிலங்களை பத்தாண்டுகளில் இருமடங்காக மாற்றுவோம் என்று கூறினார்கள், அதுவும் நடக்கவில்லை. 2021-22ல் ஒருமுறைக்கு மேல் சாகுபடி செய்த பரப்பு சுமார் 14.39 லட்சம் ஹெக்டேர். அதே 2023-24-ல், 13.6 லட்சமாக குறைந்துள்ளது. எனவே தமிழகத்தில் இருபோக சாகுபடி பரப்பு உயரவில்லை, அதை உயர்த்த இவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. இதுதான் யதார்த்தமான உண்மை.

தேங்காய், பருத்தி, சூரியகாந்தி ஆகிய பணப்பயிர்களுக்கு வேளாண் ஆக்கத்திறனில் தமிழகத்தை முதல் மூன்று இடத்தில் கொண்டுவருவோம் என்று கூறினார்கள். இந்த பயிர்களின் உற்பத்தி திறன் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. நெல் உற்பத்தி திறன் ஹெக்டேருக்கு 2021-22ல் 3,566 கிலோவாக இருந்தது. 2023-24ல், 3,354 கிலோவாக குறைந்துவிட்டது. பஞ்சு உற்பத்தித் திறன் ஒரு ஹெக்டேருக்கு 2019-20ல் 419 கிலோவாக இருந்தது, 2023-24ல் அது 312 கிலோவாக குறைந்துள்ளது. கரும்பு உற்பத்தி திறன், ஹெக்டேருக்கு 108 டன்னாக இருந்தது, 2023-24ல் அது 105 டன்னாக குறைந்துவிட்டது.

மொத்த நெல் உற்பத்தி 79.06 லட்சம் டன்னாக இருந்தது, 2023-24ல் அது 70.48 லட்சம் டன் ஆக குறைந்துவிட்டது. பயிர் வகைகள் உற்பத்தி 4.98 லட்சம் டன்னாக இருந்தது, 2023-24ல் 3.86 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. இந்த தகவல்கள் அனைத்தும் தமிழ்நாடு புள்ளிவிவரத் துறையில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த அரசு விவசாயிகளுக்கு பயன்படும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகள் உற்பத்திக்கு இடுபொருட்கள் கிடைப்பதில்லை. தரமான விதைகள் கிடைப்பதும் இல்லை, அரசு கொடுப்பதும் இல்லை.

பயிர் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அரசு முன்வருவதில்லை. பயிர் இழப்பீடுகள் கிடைப்பதில்லை. குறுவை சாகுபடிக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE