‘பட்டியல் இனத்தவர், பழங்குடியினரை உள்ளடக்குவதில் போதாமை’ - பட்ஜெட் பற்றி திருமாவளவன் கருத்து!

By KU BUREAU

சென்னை: தமிழ்நாடு அரசின் பொருளாதார அணுகுமுறையை மதிப்பிடும் வல்லுநர்கள், அதில் பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை உள்ளடக்குவதில் இருக்கும் போதாமையைச் சுட்டிக்காட்டுகின்றனர். பட்டியல் சமூகத்தவர் பழங்குடியினரை உள்ளடக்குவதில் இன்னும் பழைய நிலையே நீடிப்பது போல் தெரிகிறது என தமிழக பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு, தனது வளர்ச்சியை அதிகப்படுத்தவும், நிதித் தற்சார்பை பெறுவதற்கும் வழிவகுக்கும் நிதிநிலை அறிக்கையாக இந்த ஆண்டு "பட்ஜெட்" அமைந்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

இந்திய பொருளாதாரம் சுமார் 7% வளர்ச்சியைப் பெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் சராசரியாக 8% வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இந்தியாவின் நிலப்பரப்பில் 4% மட்டுமே உள்ள தமிழ்நாடு தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களிப்புச் செய்துள்ளது. அதுபோல தனிநபர் வருமான வளர்ச்சி தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. தேசிய சராசரி 1.69 இலட்சம் ஆகும். ஆனால் 2022 - 23 இல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானமோ, 2.78 இலட்சமாக இருந்தது.

தமிழ்நாட்டில் 2005- 2006 இல் 36.54% ஆக இருந்த வறுமை நிலை 2022-23 இல் 1.43% என குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அளவில் 2022-23 ஆம் ஆண்டில் வறுமை நிலை 11.28% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த 'பட்ஜெட்டில்' தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதோடு பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னைக்கு அருகே சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் உலகத் தர வசதிகளுடன் கூடிய "புதிய நகரம்" உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டுத்தக்கதாகும்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவான்மியூர் உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்ட சாலை 2,100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், ஒரகடம் - செய்யாறு தொழில் வழித்தடம் 250 கோடி செலவில் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை.

கடலூர் விழுப்புரம் ஆகிய தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களில் தொழிற் பூங்காக்கள் நிறுவப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டினுடைய நிதி வருவாய் 75% சொந்த வரி வருவாயில் இருந்து பெறப்படுகிறது என்ற அறிவிப்பும், இந்தியை ஏற்காவிட்டால் கல்விக்கு நிதி தர மாட்டோம் என்று அதிகாரத் திமிருடன் பேசும் ஒன்றிய அரசுக்குப் பதிலடியாக அந்தத் தொகையை தனது பட்ஜெட்டிலேயே ஒதுக்கி இருக்கும் துணிவும் தமிழ்நாட்டின் நிதித் தற்சார்புக்கு அடையாளங்களாகும்.

கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நிதிநிலை அறிக்கையிலும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்கச் செய்திருக்கிறார்.
20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்ப 'இலவச லேப்டாப்' அல்லது 'டேப்லெட்: வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவியாக ரூ.700 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு ; 880 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு ; 2676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்; அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படிப்பகம்; சென்னை கோவை மதுரை ஆகிய பெருநகரங்களில் தலா ஆயிரம் மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவியர் விடுதிகள் என்பவை சில உதாரணங்கள்.

மகளிருக்குத் தனிக் கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டு மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்தால் பத்து இலட்ச ரூபாய் வரை கட்டணத்தில் 1 % குறைவு; புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள்; மகளிர் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்ய 3600 கோடி ஒதுக்கீடு; கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்திட 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

“கல்வி , சுகாதாரம் ஆகியவற்றில் வெற்றிகரமாக விளங்கும் தமிழ்நாடு மேம்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக வயது முதிர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண வேண்டும்” என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை; மூத்த குடிமக்களுக்காக 25 அன்புச் சோலை மையங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு ஆகியவை அதற்குச் சான்றுகள்.

பட்டியல் இனத்தவரைத் தொழில் முனைவோராக்கும் '"அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்திற்குக்" கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விசிக சார்பில் கோரியிருந்தோம் 100 கோடியிலிருந்து 170 கோடியாக அது உயர்த்தப்பட்டிருக்கிறது.

"நன்னிலம்" திட்டத்திற்கும், "அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கும்" நிதியை உயர்த்த வேண்டும் என்ற எமது கோரிக்கை குறித்த அறிவிப்புகள் இதில் இடம் பெறவில்லை. அதுபோலவே பட்டியல் இனத்தவருக்கான வணிக வளாகங்களை உருவாக்க வேண்டும் என்று கோரியிருந்தோம்; அது குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை.

பட்டியல் சமூகத்து அரசு ஊழியர்களின் முதன்மையான கோரிக்கையாக இருக்கும் 'பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம்' குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தோம், அதுவும் இதில் இடம்பெறவில்லை. ஒரு வேளை மானிய கோரிக்கை அறிவிப்புகளில் அவை இடம்பெறக் கூடும் என்று கருதுகிறோம்.

எமது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பட்டியல் இனத்தவர் துணைத் திட்டம், பழங்குடியினர் துணைத் திட்டம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சட்டம் இயற்றப்பட்டு அதற்கான 'மாநிலக் கவுன்சிலும்' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் துணைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் அவற்றைச் செலவிடுவதற்கான முன்னுரிமைகளும் மாநில கவுன்சிலின் பரிந்துரைகள் அடிப்படையில் அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழ்நாடு அரசின் பொருளாதார அணுகுமுறையை மதிப்பிடும் வல்லுநர்கள், அதில் பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை உள்ளடக்குவதில் இருக்கும் போதாமையைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதுபோலவே நிதி வருவாய்ப் பெருக்கத்தில் தமிழ்நாடு அரசு பின்தங்கி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர் . இந்த பட்ஜெட்டைப் பார்க்கும் போது நிதி வருவாய்ப் பெருக்கத்துக்குத் தமிழ்நாடு அரசு அக்கறை எடுத்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஆனால், பட்டியல் சமூகத்தவர் பழங்குடியினரை உள்ளடக்குவதில் இன்னும் பழைய நிலையே நீடிப்பது போல் தெரிகிறது. மானிய கோரிக்கைகளுக்கான அறிவிப்புகளில் அது சரி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஒட்டுமொத்தத்தில் வளர்ச்சிக்கும் தற்சார்புக்கும் வழிவகுக்கும் இந்த பட்ஜெட்டை விசிக சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE