சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறையின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மும்மொழி கொள்கை, தொகுதி வரையறை பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முதல்வர் ஸ்டாலினின் முழக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு, அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தி இருக்கிறது.
பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள், பல்வேறு பிரிவுகளின்கீழ் பதியப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், எந்த முதல் தகவல் அறிக்கை, எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை.
கடை பணியாளர்களுக்கு, அவர்களின் குடும்ப சூழ்நிலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதில் எந்த தவறும் நடக்கவில்லை. அதேபோல், டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர் வெளிப்படை தன்மையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்த முறைகேடுகளுக்கும், மாற்று கருத்துக்கும் இடமில்லை. கேஒய்சி விவரங்கள், வங்கி வரைவோலைகள் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பேடெண்டர் இறுதி செய்யப்படுகிறது.
» தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்: பினராயி விஜயனுக்கு அழைப்பு
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 15, 2025
மதுபான கூடம் (பார்) டெண்டர்கள் முழுவதும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. இதுவரை ஆன்லைன் மூலம் மதுபான கூட டெண்டர்கள் மூன்று கட்டங்களாக விடப்பட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு உட்பட்டே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.
மேலும், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கும், மதுபாட்டில் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையில் பணப்பரிமாற்றங்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள், அந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலானது. எனவே, இந்த பணப் பரிமாற்றங்களை பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் கொள்முதலை பெற்றதாக தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
ஒவ்வொரு மதுபான வகையின் 3 மாத விற்பனை அளவினை கணக்கிட்டும், அவற்றுடன் கடைசி மாத விற்பனை அளவை கணக்கிட்டு, அதன்படி மதுபான கொள்முதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மதுபான கொள்முதலை பொறுத்தவரை யாருக்கும் சலுகை காட்டவில்லை. எனவே, எந்த முகாந்திரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1.000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு என்பதை முன்னதாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டியில் கூறுகிறார். அதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறையும் ரூ.1,000 கோடி முறைகேடு என்று அறிக்கையில் பதிவிட்டு கருத்தை முன்வைக்கிறது. இதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.