காரைக்குடி நெகிழ்ச்சி: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி கொடுத்த சமூக ஆர்வலர்கள்!

By KU BUREAU

சிவகங்கை: காரைக்குடி அருகே பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசமாக சமூக ஆர்வலர்கள் வீடு கட்டி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.

காரைக்குடி அருகே கோவிலூரைச் சேர்ந்த தம்பதி சுப்பையா, ரேவதி. கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு தர்ஷினி (16), தாரணி (14), பாலமுருகன் (12) ஆகிய குழந்தைகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு சுப்பையாவும் உயிரிழந்தார். தர்ஷினி 10-ம் வகுப்பும், தாரணி 9-ம் வகுப்பும், பாலமுருகன் 7-ம் வகுப்பும் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். அத்தை பராமரிப்பில் இருக்கும் அவர்கள் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மழையில் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகள் வசிக்க இடமின்றி தவித்து வந்தனர். இதையடுத்து காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து செங்கல், எம்.சாண்ட், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை இலவசமாக கொடுத்தனர்.

சிலர் பண உதவி செய்தனர். இதன்மூலம் ரூ.2.5 லட்சத்தில் 16 அடி நீளம், 10 அடி அகலத்தில் வீட்டை கட்டிக் கொடுத்தனர். அந்த வீட்டுக்கு குயில் கூடு என்று பெயரிட்டு, அதை நேற்று சமூக ஆர்வலர்கள் குழந்தைகள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன், மருத்துவர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வீடு திறப்பு விழாவுக்கு வந்த சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த பண உதவிகளை குழந்தைகளுக்கு கொடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE