திருப்பத்தூர்: ஏலகிரிமலையில் விமானப்படை வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி மற்றும் ஓட்டுநர்களுக்கு மலை வளைவுகளில் வாகனங்களை இயக்குவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் ஏலகிரி மலை உள்ளது. மலையடிவாரத்தில் இருந்து 14 கொண்டே ஊசி வளைவுகள் வழியாக இம்மலைக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். ஏலகிரி மலை ஊராட்சியில் விமானப்படை வீரர்களுக்கு மலையேறும் பயிற்சியும், மலைப் பகுதிகளில் உள்ள வளைவுகளில் நான்கு சக்கர வாகனங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
தினசரி, காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொண்டை ஊசி வளைவில் கார் மற்றும் லாரி வாகனங்களை ஓட்டுநர்கள் எளிதாக இயக்குவது எப்படி என்பது குறித்தும், மலையடிவாரம் கீழ் பகுதியில் இருந்து மலைக்கு மேல் பகுதிக்கு செல்வதும், மலைமேல் இருந்து வாகனங்களை எளிதாக கீழ் பகுதிக்கு கொண்டு வருவது குறித்தும், மழைக் காலங்களில் வாகனங்களை எப்படி இயக்குவது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகன ஓட்டுநர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அதேபோல, விமானப்படை வீரர்கள் மலையேறுவது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பு முடிவுற்றதை தொடர்ந்து சென்னை, ஆவடி விமானப்படை வீரர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இணைந்து ஏலகிரி மலைப்பாதையில் சிறப்பு துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.
» மின் கம்பியில் பிளக்ஸ் பேனர் உரசி இளைஞர் உயிரிழப்பு: பாளையங்கோட்டையில் சோகம்
» நெல் குவிண்டாலுக்கு ரூ.3,100 - சத்தீஸ்கர் முதல்வரை சந்தித்து வாழ்த்திய தமிழக விவசாயிகள்!
ஏலகிரி மலை சோதனை சாவடி முதல் 14 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பொன்னேரி மலையடிவாரம் வரை உள்ள இருபுறமும் சாலையில் உள்ள குப்பைக் கழிவுகள், மரங்களில் இருந்து கீழே விழுந்த காய்ந்த இலைகள், பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்தனர். இந்த முகாமில் ஏலகிரி மலை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ ஸ்ரீ கிரிவேலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.