டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழலா? - அமைச்சர் செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

By KU BUREAU

சென்னை: வெளிப்படைத்தன்மையுடன் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடைசி 3 மாத காலம் விற்பனை பட்டியலை எடுத்து மட்டுமே, டாஸ்மாக் நிறுவனம் கொள்முதலுக்கான உத்தரவை வழங்கும். அதன்படியே கொள்முதல் செய்யப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் சோதனை என்று அமலாக்கத்துறை கூறி இருக்கிறது. ஆனால் எந்த ஆண்டில் பதிவான முதல் தகவல் அறிக்கை என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. அதேபோல் பணியிட மாற்றங்கள் என்பது குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களுக்காக தான் பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் தவறுகளை நடந்திருப்பதை போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதேபோல் டெண்டர் என்பது வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் எந்த முறைகேடுகளுக்கு இடமில்லை. அதில் அவர்கள் ஆவணங்களை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பார் டெண்டராக இருந்தாலும், அது முழுமையாக ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சொல்லி இருக்கிற ஆயிரம் கோடி முறைகேடு என்பது பொத்தாம் பொதுவாக சொல்லி இருக்கிறார்கள். அதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. ரூ.1000 கோடி என்பதை முன்னதாக ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார். பின்னர் அமலாக்கத்துறை அதே ஆயிரம் கோடி என்று அறிக்கையில் பதிவிட்டு கருத்தை முன் வைக்கிறார்கள். இதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். எனவே, அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

வெளிப்படைத்தன்மையுடன் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதில் உள்நோக்கம் கற்பிக்க தேவையில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது கூட ஒரு நேரத்தில் ஆயிரம் கோடி, மற்றொரு முறை ரூ.40 ஆயிரம் கோடி என்கிறார். கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த போது என்ன நடைமுறை இருந்ததோ, அது மெருகேற்றப்பட்டு புது பொழிவுடன் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடைசி 3 மாத காலம் விற்பனை பட்டியலை எடுத்து மட்டுமே, டாஸ்மாக் நிறுவனம் கொள்முதலுக்கான உத்தரவை வழங்கும். அதன்படியே கொள்முதல் செய்யப்படுகிறது.

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று 3 நாட்களாகிவிட்டது. ஆனால் பட்ஜெட்டுக்கு முதல்நாளான நேற்று வெளியிடப்பட வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசின் பட்ஜெட்டை மூடி மறைக்க அமலாக்கத்துறை அவசர அவசரமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி வரையறை பிரச்சனையை மக்கள் மத்தியில் முதல்வர் கொண்டு சென்றுள்ளார். அதனை பொறுத்து கொள்ள முடியாமல் அமலாக்கத்துறையை ஏவி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயரை உருவாக்க முயற்சிக்கிறார்கள். புதிய ஆலைகளுக்கோ, புதிய கடைகளுக்கோ அனுமதி அளிக்கப்பட்டதா? அப்படி எதுவும் நடக்கவில்லை. புதிய கொள்கை முடிவுகளையும் எடுக்கவில்லை. இதுவரை டாஸ்மாக் நிறுவனம் எப்படி செயல்பட்டு வந்ததோ அப்படியே செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, ‘டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதன் அடிப்படையில் ரூ.1000 கோடி அளவில் டாஸ்மாக் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் ரூ.40 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் விழுகிறது. இதற்கு அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்து பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE